புதினங்களின் சங்கமம்

யாழில் லண்டனிலிருந்து வந்து ஒரு பனை தறித்தவருக்கு சிறை!! 300 பனை தறித்தவர் சுதந்திரமாக திரிகின்றார்!! நடப்பது என்ன? (Photos)

யாழ்.தீவகம் அல்லைப்பிட்டியில் தனிப்பட்ட நபர் ஒருவரால் அனுமதி எதுவுமின்றி அவரது சொந்தக் காணியில் இரண்டு நாட்களில் சுமார் முந்நூறு பனைகள் தறித்து அழிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் வேலணைப் பிரதேச செயலரும், அதிகாரிகளும், மேற்படி பகுதிக் கிராம சேவகரும் கண்டும் காணாமல் அசிரத்தையுடன் செயற்பட்டு வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தின் வேறு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அல்லைப்பிட்டி ஜே-10 கிராம சேவகர் பிரிவில் தனியார் காணியொன்றை அண்மையில் கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக நோக்கில் சிந்திக்காது அக் காணியில் நின்ற பயன்தரும் 300 பனைகளை பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் இரண்டு நாட்களில் அழித்துள்ளார்.

இந்தச் செயற்பாட்டைப் அப்பகுதிப் பொதுமக்கள் சிலர் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் தீவகத்தைச் சேர்ந்த இளம் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் இன்றையதினம் வேலணைப் பிரதேச செயலரிடம் வினாவிய போது தாம் இன்னும் இதுதொடர்பில் அறியவில்லை எனவும், பார்ப்போம்…எனவும் அசண்டையீனமாகப் பதிலளித்தார்.

அண்மையில் லண்டனிலிருந்து வந்த புங்குடுதீவைச் சேர்ந்த புலம்பெயர் அன்பர் ஒருவர் தனது காணியில் நின்ற பனையொன்று வீட்டின் மீது முறிந்து விழும் என்ற அச்சம் காரணமாகத் தறித்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாள் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்ததுடன் தண்டப் பணமும் அறவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 300 பனைகளை முன் அனுமதி எதுவுமின்றி ஒருவர் தறித்து அழித்திருப்பது பலரையும் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், குறித்த பகுதிக் கிராம சேவகரும், பிரதேச செயலர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் 300 பனைகள் அழிக்கப்படும் வரை என்ன செய்து கொண்டிருந்தனர்? எனவும் பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, அல்லைப்பிட்டியில் கடலரிப்பு அண்மைக் காலமாக அதிகரித்துள்ள நிலையில் கடலரிப்பைத் தடுப்பதற்கும், மழைவீழ்ச்சிக்கும் பனை உள்ளிட்ட மரங்களின் பங்கு முக்கியமானது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)