புதினங்களின் சங்கமம்

வடபகுதியில் அதிசய பப்பாசியா? பப்பா தோட்ட தயாளினி என்ன சொல்கின்றார்??

1996 ஆம் ஆண்டு யுத்தகாலப்பகுதியில் கிளிநொச்சியில் எனது கணவர் காணாமல் போனார். அன்றிலிருந்து எனது மூன்று பிள்ளைகளையும் வளர்த்தெடுப்பதற்காக அயல் வீடுகளின் தோட்டத்தில் கூலி வேலை செய்தேன். பிறகு அதனை விட்டு நானே வீட்டுத்தோட்டம் செய்தேன். ஆனாலும் அந்த வருமானம் போதவில்லை. 2012ஆம் ஆண்டின் பின்னர்தான் ஐ.எல்.ஓ நிறுவனத்தின் மூலம் 160 பப்பாசிக் கன்றுகளைப் பெற்று பயிரிட்டேன். அவை அறுவடையில் திருப்தி தந்தமையினால் தொடர்ந்து செய்து வருகின்றேன்.”

“எனது மூத்த மகள் திருமணம் முடித்து விட்டாள் மற்றைய இரண்டு மகள்களும் உயர்தரத்தில் படிக்கின்றார்கள். அவர்களது கல்விக்கான செலவு உட்பட எமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதற்கு பப்பாசி தரும் வருமானம் போதுமானதாக இருக்கின்றது.

“எனது 5 பிள்ளைகளையும் பப்பாசி மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலமே படிக்க வைக்கின்றேன். என்கின்றார் நெடுங்குளம் ஓடவெளியைச்சேர்ந்த 44 வயதான சுப்ரமணியம் தயாளினி.

எனது இரண்டு பிள்ளைகள் உயர்தரத்திலும் ஒருவர் சாதாரண தரத்திலும் மற்றையவர்கள் இடைத்தரத்திலும் கல்வி கற்கின்றார்கள்.முக்கால் ஏக்கரில் பயிரிடப்பட்ட 320 பப்பாசிக் கன்றிலிருந்து எமது வாழ்க்கையை நடாத்துகின்றோம் என்கின்றார் தயாளினி.

மரபணு மாற்றம்
இவ்வாறு இன்று எங்கு பார்த்தாலும் பப்பாசி…பப்பாசி, முன்னர் புகையிலை ..புகையிலை என பணப்பயிர் வளர்த்தமாதிரிதான் இதுவும் இன்ற ஆகிவிட்டது. ‘RED LADY ‘எனப்படும் பப்பாசியினம் வடக்கில் தற்போது கிராக்கி அதிகரித்த பழச்செய்கை. இன்றைய பணப் பயிரான இது மாதத்திற்கு 2 லட்சம் கிலோ வீதம் நெடுங்கேணியிலிருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்படுவதாக வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் சபாரத்தினம் இராஜேந்திரன் கூறுகிறார்.

இரண்டு வெவ்வேறு பப்பாசி இனங்களைக் கலந்து மரபணு மாற்றத்திற்கு உட்படுத்துவதன் மூலம் புதியவகை இனமான REDLADY பப்பாசி இன விதை பெறப்படுகின்றது. இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தாய்லாந்து போன்ற வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

சாப்பிட்டுவிட்டு பப்பாசி விதைகளை குப்பையில் எறிந்தால் வளர்ந்து காய்த்து பழம் தந்தது இன்று வெளிநாட்டில் இருந்த இறக்குமதி செய்யப்பட்டு ஒரு பக்கட் பப்பாசி விதைகள் 8 ஆயிரத்து600 ரூபாவிலிருந்து விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

10 கிராம் பக்கட்டில் 520 தொடக்கம் 600 பப்பாசிவிதைகள் காணப்படும் இவ்விதைகளின் முளைதிறன் வீதம் 85 தொடக்கம் 90 வரையாகும். இவ்வாறு பெறப்படுகின்ற விதையினை முளைக்க வைதத்து கன்றுகளாகவே விவசாயிகளுக்கு வழங்குகின்றோம். பப்பாசி வளர்ந்து உச்ச பயனைத் தருவதானது பசளை, நீர்ப்பாசனம்,நோய்ப்பாதுகாப்பு போன்றவற்றில் தங்கியுள்ளது என்கின்றார் வவுனியா விவசாய திணைக்கள முகாமையாளர்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மட்டும் 200 ஏக்கர் பரப்பளவில், பப்பாசிப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு செய்து வருவதாக வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் சபாரத்தினம் இராஜேந்திரன் கூறுகின்றார்.

இந்த நிலையில்
‘Red lady’ பயிர்ச்செய்கையை செஞ்சாலும் நான் அதைச்சாப்பிட விரும்புறது இல்லை. எங்கட வீட்டில முன்னம் மூண்டு ஊர்ப் பப்பாசி நிண்டது. அதிலதான் பழம் பிடுங்கி சாப்பிடுறனான்.’ என ‘Red lady’ பப்பாசி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் செ.நளினி கூறுகின்றார். சரி பப்பாசியின் சந்தை எங்கே உள்ளது? என ஆராய்ந்தால்,

உற்பத்தி செய்யப்பட்ட Redlady பப்பாசியை CR எனும் ஏற்றுமதியாளரினூடாக வெளிநாடுகளிற்கு அனுப்புகின்றோம். ஒரு Redlady பப்பாசிப் பழம் 1 கிலோ முதல் 2 கிலோவுக்கு உட்பட்ட பழமாக இருக்கவேண்டும். அதேவேளை நீண்ட தோற்றத்ததிலும் இருக்க வேண்டும்.உருண்டையாக இருக்கக்கூடாது. ஆதில் 1கிலோ பழம் 30 ரூபாவுக்கு நிர்ணய விலையாக தீர்மானிக்கப்படுகிறது. ஏன்கிறார் ராஜேந்திரம்.

எனவே இந்த வியாபாரம் சூடுபிடித்துள்ளது. எல்லோருக்கும் கைநிறையக் காசு. இதன் பின்னால் உள்ள சில விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.

எமது விவசாயம் எமது கைகளில் இல்லை

Redlady பப்பாசியினத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு முறை பயிர் செய்கையை ஆரம்பிப்பதற்கும் விதைகளை பணம் கொடுத்து வாங்கவேண்டும். முன்னர்போல் விதைகளைப் பத்திரப்படுத்தி அடுத்த விதைப்புக்கு பயன்படுத்த முடியாது. இது அந்நிய நாட்டவரை நம்பி செய்யும் விவசாயமாகிவிட்டது.

அவர்களிடமிருந்து பெறப்படும் விதைகளே வளர்ந்து பயன்தரும். முன்பு வைத்த மரங்களின் கனிகளிலிருந்து பெறப்படுகின்ற விதைகளை வைத்து பயிர் செய்யலாமா என்றால் அதுதான் இல்லை. பயன்தரும் என்ற எண்ணத்தில் பயிரிட்டு உழைப்பையும் பணத்தையும் காலத்தையும் செலவளிக்கும் விவசாயிகளுக்கு மிஞ்சுவது ஏமாற்றமாகத்தான் இருக்கும். மரம் நன்கு வளரும்.ஆனால் காய்க்காது. இவ்வாறு எம்மிடம் விதைகளும் இல்லை.அதனால் உற்பத்திக்கான அதிகாரம் எம்மிடம் இல்லை. உற்பத்திகளை நாம் பாவிப்பதும் இல்லை. எமக்கு தேவைப்படவில்லை.அப்படியாயின் இது எந்த வகையான வியாபாரம்?

விதை இறக்குமதி நிறுத்தப்பட்டால் பயிர்ச்செய்கை குளோஸ்!
எனவே இது வெளிநாட்டுகான தொழிற்துறையின் முதலீட்டுக்கு குறைந்த கூலியை பெற்றுக்கொடுக்கும் இடமாக இலங்கை விவசாயமும் மாறிவிட்டதா? முன்பெல்லாம் வெளிநாடுகள் எமது ஊழியர் படையை நம்பி முதலிட்டது.தற்போது நமது மண் வளத்தை குறைந்த செலவில் அனுபவிக்கின்றனவா?

அடுத்தது, எமது நாட்டில் ரத்னா போன்ற சுவையானதும் பருமனுமான பலவகை பப்பாசியினங்கள் இருந்தன. அவை எல்லாம் எங்கே என்று தேடிப்பார்த்தால் கிடைப்பதரிதாகிவிட்டது.

அப்போ, இருந்ததும் அழிக்கப்பட்டுவிட்டது. புதிதாக வந்ததிற்கும் எம்மிடம் உரிமையில்லை. இறக்குமதி நிறுத்தப்பட்டால் என்னாவது எமது பயிர்ச்செய்கை?

நான் இப்ப 4 ஏக்கர்ல பப்பாசி செய்கை பண்ணுறன். கால் ஏக்கர்ல தோட்டம் செய்றன். முதல் கத்தரி, வெண்டி செய்து நட்டப்பட்டு போனன். ஆனால் இப்ப பப்பாசி நல்ல லாபம் தருது. கத்தரி, வெண்டியை விட்டிற்று மிச்ச காணிலயும் பப்பாசிய செய்கை பண்ணப்போறன். ஆனால் பப்பாசி விதை எதிர்காலத்திலை கடைக்காட்டில் விவசாயத் திணைக்களம்தான் எங்களுக்குத் தீர்வைச் சொல்ல வேண்டும்.’ என்கின்றார் ஒலுமடுவைச் சேர்ந்த தம்பையா சந்திரகுமார்.

விவசாய ஆராய்ச்சி பணிமனையிடம் இதுபற்றிக் கேட்டால்,
‘எமது உள்ளுர் இனங்கள் நன்றாக வளரும் ஆனால் சிறிய பழங்கள் , அதிகளவான விளைச்சலைத் தராது. ஆனால் சுவையான பழங்கள். இப்போது ‘Red Lady’ பப்பாசி மூலம் விவசாயிகள் பலனடைகின்றார்கள். எதிர்காலத்தில் இந்த இனத்திற்கான தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் விவசாயிகள் அனைவரும் வேறு ஒரு பயிர்ச்செய்கையில் நாட்டம்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என்கின்றனர்.

விவசாய பெருமக்களே கவனியுங்கள்.
சரி…எமது பாரம்பரிய விதையினங்கள்பாதுகாக்கப்பட்டனவா? அதுவும் போரில் எல்லாமே அழிந்து போன தருணத்தில் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை?

‘எமது விதையினங்கள் யாவும் தாவர கருவூல வள நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன’ என விவசாய ஆராய்ச்சி மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே. அரசகேசரி குறிப்பிடுகின்றார். அது பெரும்பாலும் வடக்கு கிழக்கை உட்படுத்தியுள்ளதா ? என்பது சந்தேகமே. வடக்கு கிழக்கில் பல பயிரினங்கள் இல்லாது போய்விட்டன.

தெல்லிப்பளையில் புதிய வகை பப்பாசி இனம்
இந்நிலையில் ‘நாம் எமது உள்ளுர் பப்பாசி இனமொன்றை தெல்லிப்பளையின் ஒரு வீட்டில் கண்டு பிடித்திருக்கின்றோம். பெயர் இன்னும் வைக்கவில்லை. 100 கன்றுகளை உற்பத்தி செய்திருக்கின்றோம் அதனைத் தெரிவு செய்ய்பட்ட 10 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்போம் இதன் மூலம் எமது பாரம்பரிய இனத்தை விருத்தி செய்ய முடியும்’ என வட்டுக்கோட்டையின் அரசசார்பற்ற நிறுவன இயக்குனர் யு.சௌந்தரராஜா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு எத்தனை பயிரினங்கள் பாதுகாக்கப்பட்டன என்பது கேள்விக்குரியதே.

மரபணு மாற்றம்
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் விநியோகத்திற்கு எதிராக விவசாயிகளால் போராட்டங்கள் நடாத்தப்படுகின்ற இந்நிலையில் எமது நாட்டில் சும்மா குப்பைல எறிந்தால் மளமளவென வளர்ந்து காய்க்கும் எமது பப்பாசியினத்தை தொலைத்துவிட்டு வெளிநாடுகளில் விதைகளை வாங்கி பயிரிடுவது சாதாரண விடயமாக இருந்தாலும் விதைகள் விருட்சமாகி அதன் கனிகளில் பெறப்படும் விதைகளால் எதுவித பலனும் இல்லையெனின், அதன் பாதிப்பு பெரிதே.

அபாயம்
எமது அடையாளம் ஒவ்வொன்றையும் தொலைத்துவிட்டு அதிக விளைச்சலுக்காக ஆசைப்படுவது விவசாயிகளின் நிர்ப்பந்தம். கத்தரி,மிளகாய் வெண்டி என்பன செய்து நிர்ணய விலையின்மையால் அதைக் கைவிட்டவர்கள் எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கென புதியவகை கத்தரி போன்ற பயிர்களின் மரபணு விதைகள் வெளிநாட்டிலிருந்து பெற்று பயிரிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் எஞ்சியிருக்கின்ற ஏனைய பாரம்பரிய பயிர்களும் அழிந்து போகும் அபாயம் உள்ளதல்லவா?

ஒவ்வொரு விதையும் பாதுகாக்கப்படும்போதுதான் விவசாயம் பாதுகாக்கப்படும். விவசாயம் பாதுகாக்கப்படும்போதுதான் நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்பது நியதி.

-உத்தமன்-