புதினங்களின் சங்கமம்

புலமைப்பரிசில் பரீ்ட்சையில் யாழ் மாணவி சாதனை!! ஏனைய மாவட்ட உயர்பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகளின் விபரம்!!

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலமாக தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் புத்தளத்தைச் சேர்ந்த மாணவி 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தினைச் சேர்ந்த முகமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதேபோல வடக்கு மாகாணத்தில் வெளியாகியுள்ள சில முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சுபாஸ்கரன் ஜனுஷ்கா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அதே பாடசாலையில் 38 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவன் முரளிதரன் அஸ்விகன் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் மாணவர்கள் 46 பேர் வெட்டுப்புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதேபோல கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு விசுவநாதர் ஆரம்பப் பாடசாலை மாணவன் ர.நிதுஷன் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் 70 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை ரீதியில் காலி மாவட்டம் சங்கமித்தை கல்லூரி மாணவி சியாதி சண்துண்தி கருணாதிலகா மற்றும் முகமட் பர்சான், முகமட் அம்ர் சிகத் சந்துனு ஆகியோர் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.2020ஆம் ஆண்டுக்கான தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 160 புள்ளிகளும் மன்னார் மாவட்டத்துக்கு 158 புள்ளிகளும் திருகோணமலை மாவட்டத்துக்கு 159 புள்ளிகளும் கொழும்பு மாவட்டத்துக்கு 162 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.