கள்ளக்காதல் மோகம்!! கணவனை வித்தியாசமான முறையில் கொன்ற மனைவி!!
கணவனை அடித்துக் கொன்று விபத்து என்று நாடகமாடிய மனைவியை கள்ளக்காதலனுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தமிழகம் தர்மபுரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது,
தர்மபுரி மாவட்டம் சிட்லகாரம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும், கானாப்பட்டியை சேர்ந்த முனியம்மாளுக்கும் (20) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த மாதம் 26-ம் திகதி வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் கானாப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு அன்று இரவு வெங்கடேசன், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி முனியம்மாளை ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பினார்.
இந்த நிலையில் வெங்கடேசன் ஒன்னப்ப கவுண்டனஅள்ளி மயானம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இது குறித்து பொலிசார் முனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முனியம்மாள் கூறும்போது, தனது கணவர் வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டதில் இறந்தார் என கூறினார். இது குறித்து பாப்பாரப்பட்டி பொலிசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இறந்து போன வெங்கடேசனின் தங்கை அருள்ஜோதி என்பவர் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பாப்பாரப்பட்டி பொலிசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் பொலிசார் வெங்கடேசன் மரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், வெங்கடேசனின் மனைவி முனியம்மாளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது முனியம்மாள் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்தார். இதனால் முனியம்மாள் வெங்கடேசனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்தனர்.
பொலிசாரின் தீவிர விசாரணையில் முனியம்மாள் திருமணத்துக்கு முன்பே கானாப்பட்டியை சேர்ந்தவரும், சென்னையில் உள்ள ஹோட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வருபவருமான விஜய் (22) என்பவரை காதலித்து வந்ததும் திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கிடையில் பழக்கம் நீடித்து வந்ததும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று தனது கணவர் வெங்கடேசனுடன் தான் மோட்டார் சைக்கிளில் வருவதாக தனது கள்ளக்காதலனுக்கு தகவல் தெரிவித்தார். தயாராக காத்திருந்த கள்ளக்காதலன் விஜய் ஓ.ஜி.அள்ளி மயானம் அருகே வெங்கடேசன் செலுத்திவந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து இரும்பு கம்பியால் வெங்கடேசனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் உயிரிழந்தார். பின்னர் விஜய் அங்கிருந்து தப்பியோடியதும் விபத்தில் இறந்ததாக முனியம்மாள் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விஜய் மற்றும் முனியம்மாள் இருவரையும் பாப்பாரப்பட்டி பொலிசார் நேற்று கைது செய்தனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளதாக அறியமுடிகிறது.