புதினங்களின் சங்கமம்

மக்கள் படையின் ஆக்ரோசம்!! மண்டைதீவில் கடற்படை காணி சுவீகரப்பு நிறுத்தம்!!(video)

யாழ்ப்பாணம் மண்டைதீவு வெலுசுமண கடற்படை தளம் அமைந்துள்ள தனியார் காணிகளை சுவீகரிக்கும்
முயற்சிக்கு எதிராக இன்று காலையில் அங்கு எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மக்களின்
எதிர்ப்பு போராட்டத்தையடுத்து, காணி அளவீட்டு முயற்சியை பாதியிலேயே கைவிட்டு,
அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மண்டைதீவு கடற்படை தளம் அமைந்துள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. கடற்படை தளம் அமைந்துள்ள 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 றூட் 10
பேர்ச்சஸ் காணியையும் சுவீகரிக்கும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறும் நில அளவீட்டை நிறுத்தும்படி ஜனாதிபதி, பிரதமரை நேரில்
சந்தித்து கூட்டமைப்பினர் வலியுறுத்தியபோதும், அந்த கோரிக்கை கணக்கிலெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இன்று காலையில் நில அளவை திணைக்களத்தினர் மண்டைதீவு காணிகளை அளவீடு செய்ய வந்தபோது,
அங்கு குழுமியிருந்த போராட்டக்காரர்கள் வாகனத்தை நகரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
அளவீட்டு முயற்சிக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்று காலையிலிருந்தே கடற்படை முகாமிற்கு முன்பாக பெருமளவானவர்கள் ஒன்று
திரண்டிருந்தனர். காணிகளின் உரிமையாளர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின்
உறுப்பினர்களே இன்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணிகள் தமக்கு தேவையென்றும், அதை சுவீகரிக்க அனுமதிக்கப் போவதில்லையென்றும் காணி
உரிமையாளர்கள் 25 பேர் கையொப்பமிட்டு, நிலஅளவை திணைக்களத்தினரிடம் மகஜர் கையளித்தனர்.

இதையடுத்து நிலஅளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர். மீண்டும் சிறிது சதாதமாக
பொலிசாரின் பாதுகாப்புடன் திரும்பி வந்தபோதும், தொடர் எதிர்ப்பால் நிலஅளவை
திணைக்களத்தினரும், பொலிசாரும் அமைதியாக திரும்பிச் சென்றனர்.