மட்டக்களப்பில் ஊரடங்கு நேரத்தில் சிவப்பு சாயம் பூசிய அரிசியை விற்க முயன்ற கொடூரர்கள்!! (Photos)
மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் மனித உடலுக்கு கேடுவிளைவிக்கும் சிகப்பு நிற சாயம் முலாமிடப்பட்ட ஒரு தொகை அரிசி மூடைகளை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலையமொன்று சுகாதார திணைக்கள அதிகாரிகளினால் இன்று 02.04.2020 முற்றுகையிடப்பட்டுள்ளது.
இக்கடையிலிருந்து ஒன்பது மூடை அரிசியும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் உரிமையாருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்எச்எம். தாரிக் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏஎல். நௌபர் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் 1 ஆந்திகதியன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தவேளையில் ஏறாவூரில் நடாத்தப்பட்ட விசேட சந்தையில் அமைக்கப்பட்டிருந்த வர்த்தக மையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவப்பு சாயம் கலக்கப்பட்ட அரிசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முற்றுகை நடவடிக்கை இதுவாகும்.
இந்த அரிசியில் கலப்படம் செய்யப்பட்டுள்ள சிவப்பு நிற சாயம் எந்த வகையினைக்கொண்டது என்பதை அறிவதற்காக அரிசியின் ஒருபகுதி கொழும்பிலுள்ள அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்தார்.
தவிட்டரிசி என்ற போர்வையில் சிவப்பு சாயம் கலக்கப்பட்ட அரிசி சந்தைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கலப்பட நடவடிக்கை ஏறாவூர்ப் பற்று பிரதேசத்திலுள்ள ஆலையொன்றில் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
நோயாளர்களின் பாவனைக்காக சிபாரிசு செய்யப்படும் சிவப்பு அரிசியில் மனித சுகாதார நலனுக்கு கேடுவிளைவிக்கும் பதார்த்தங்களை கலப்படம் செய்வது மனிதாபிமானமற்ற செயலென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


