கொரோனா – கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பது ஏன் கடினமாகிறது?

கோவிட்-19 வைரஸ் கட்டற்று உலகலாவிப் பரவுகிறது என்பது தான் இன்றைய நிலை. ஏன் அவ்வாறு அமைகிறது? ஏன் தடுக்கமுடியவில்லை?. விமான நிலையங்களில் தொற்று உடையவர்கள் வந்திறங்கும் போது, அங்கே அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தியிருந்தால், நோய்த் தொற்று நாட்டுக்குள் வராமல்த் தடுத்திருக்கலாமே? இவை அனைத்தும் நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளுக்கான பதில் தான் அதிர்ச்சியானது. இந்நோய் தோற்றம் கண்ட சீனாவில், ஜந்தில் நான்கு பேர், இந்நோய்த் தொற்றை யாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களோ, அந்த நபருக்கு;கு தனக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்ப்பட்டுவிட்டது என்பது தெரியாமலே இருந்துள்ளார். அதாவது அவ்வாறானவர்களிடம் நோய்த் தொற்றிக்கான அறிகுறிகள் பெரிதாக வெளிப்படவில்லை. ஆம், அவர்களுக்கு காச்சல் இருக்கவில்லை. அவர்கள் இருமவில்லை அவர்கள் தும்மவில்லை. அவர்கள் சாதாரணமாக சுவாசித்தார்கள். அதேவேளை நோய்த் தொற்று ஏற்ப்படுபவர்களில் அதிகபட்சம் 15 சதவீதமானோரே வைத்தியசாலை சிகிச்சைகளை நாடும் நிலை ஏற்ப்படுகிறது. ஏனையவர்கள் தமது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டே இன்று குணமடைய முனைகின்றனர்.

இப்போது சொல்லுங்கள், அதிகரித்த உடல் வெப்பநிலை இருக்கிறதா? இருமல், தும்மலுடன் ஒருவர் வருகின்றாரா? என விமானநிலையங்களிலோ, விமானங்களில் ஏற்றுவதற்கு முன்னரோ, சோதித்துப் பார்த்தால், 20 சதவீதமோ அல்லது அதற்கு குறைவானவர்களே மாட்டிக் கொள்ளுவார்கள். 80 சதவீதமோ அலலது அதற்கு மேற்ப்பட்டவர்கள், நழுவிச் சென்றுவிடுவார்கள். சரி அது சாத்தியமில்லை என்பது தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நாட்டிற்குள் கட்டுப்படுத்துவதில் என்ன சவால்? இங்கும் அதே சவால தான். தனக்கு நோய்த் தொற்று உண்டு என்று தெரியாமலே, ஏற்கனவே கோவிட்-19 நோய்த் தொற்றுடைய 80 சதவீதமோ அல்லது அதற்கு மேற்ப்பட்டோர், ஏனையவர்களுக்கு பரப்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகமே. அவர்கள் தாங்களாகவே சோதனைக்கு வரப்போவதில்லை. இதனால் தான் நாடுகளை பல வழிகளில் முடக்கவேண்டிய தேவை அதிகரிக்கிறது. அதேவேளை நோய்ப் பரம்பலின் வேகத்தை சரியாக அறிந்தாலே, அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே, உலக சுகாதார நிறுவனம் சோதனை, சோதனை, சோதனை, என மீண்டும், மீண்டும் அலறுகிறது.

சரி, எழுந்தமான சோதனைகளை அதிகரிக்கலாம் தானே? என நீங்கள் கேட்டால், அது சரியான யோசனை தான். இங்கு தான் அடுத்த சிக்கல் வெடிக்கிறது. சோதனை செய்வதற்கான போதிய சோதனைப்பொதிகள் இன்றி, இன்றும் அல்லாடுகிறது அமெரிக்காவே. அவ்வாறானால் ஏனைய நாடுகளின் நிலையை ஒரு முறை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.. இருக்க உலகில் இன்று அனைத்து நாடுகளும், நோய்த் தொற்றிக்கு இலக்காகி, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் நிலையில், இந்தப் சோதனைப் பொதிகளை யாரும் இன்னொவருக்கு வழங்கும் நிலையில் இல்லை. இதனால் நாளும் அதிகரித்துச் செல்லும் தொற்றின் எண்ணிக்கை எல்லை கடக்கிறது என்பதே உண்மை. முன்னேற்ப்பாடாக இருந்திராத நிலையில், துரத்தியாவது பிடிக்க முயன்று, அதில் மோசமாக நாம் இன்று உலகளாவிய நிலையில், தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்நிலை சொல்லும் செய்தி, இன்று நாளும் வெளியாகும் புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, வெறும் சிறு துண்டு தான். அதே போன்று இறந்துபோகும் பலர், முன்கூட்டியே நோய்த் தொற்று உடையவர்கள் என்று கண்டறியப்படாததால், கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையிலும் அடங்கமாட்டார்கள். இந்நிலையில், உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், காத்துக் கொள்வதில் புரிதலுடன் அதீத கவனம் எடுத்துச் செயற்பட்டுக் கொள்ளுங்கள்..

error

Enjoy this blog? Please spread the word :)