புதினங்களின் சங்கமம்

பெண் ஊழியருக்கு அறைந்த பாதகனின் பதவி பறிக்கப்பட வேண்டும்-மட்டு மாநகர சபையில் தீர்மானம் (Video)

நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தின் உயர் அதிகாரியினால் தாக்கப்பட்ட பெண் உத்தியோகத்தருக்கு நீதி கோரியும், தாக்கிய உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்வதோடு, அவர் மீதான விசாரணையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 29ஆவது சபை அமர்வானது இன்றைய தினம் (09.01.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய ஆண்டின் முதல் அமர்வாக இடம்பெற்ற இவ்வமர்வில் நிலையியற் குழுக்களுக்கான புதிய உறுப்பினர் தேர்வும் இடம்பெற்றது. இதில் பிரதான நான்கு நிலையியற் குழுக்களுக்கும், விஷேடமாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு நிலையியற் குழுக்களுக்குமாக மொத்தமாக எட்டு குழுக்கழுக்கான உறுப்பினர் தேர்வுகள் சகல கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டன.

மேலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின் இடைநிறுத்தப்பட்ட பௌர்ணமி கலை விழாவினை இம்மாதம் முதல் நடத்துவதற்கான அனுமதியும் சபையால் கலைக்குழுவிற்கு ஏகமனதாக வழங்கப்பட்டது.

அமர்வின் விசேட அம்சமாக 2020.01.01 அன்று புத்தாண்டு வேலை ஆரம்ப நிகழ்வின் போது நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான தவப்பிரியா மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாகவும், குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்திய அதிகாரியின் பதவியை நீக்கி அவர் மீதான விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் முன்மொழிவானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவினால் முன்வைக்கப்பட்டது.

பெண்களை உரிமைகள் பற்றிப் பேசப்படுகின்ற இந்த நாட்டில் அதுவும் புத்தாண்டு தினத்தில் ஓர் பெண் என்றும் பாராமல் நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான திருமதி தவப்பிரியா தாக்கப்பட்டுள்ளார். இவருடைய கண்ணத்தில் அறைந்தமையால் செவிப்பறை உடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாதாக தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் வே.தவராஜா.

இந்த நிகழ்வானது உலகத்தில் மனிதநேயத்தனை மதிக்கின்ற அத்தனை மனிதர்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு என்றும் இதனைக் இந்தச் சபையில் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதற்குக் காரணமான பாதகனை உடடியான பணி நீக்கம் செய்வதோடு, அவர் மீதான விசாரணையையும் முன்னெடுக்க வேண்டும் எனும் தீர்மானத்தினையும் இந்தச் சபையில் நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதன்படி குறித்த முன் மொழிவானது உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்ட்டதுடன் குறித்த கண்டனத் தீர்மானத்தினை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவிப்பது தொடர்பிலும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.