புதினங்களின் சங்கமம்

விமானத்தில் பறக்க யாழ். இளையோருக்கு இலவச வாய்ப்பு, பெற்று தருகிறார் சந்திரசிறி

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை உரிய கட்டுமாணங்கள், உயரிய வசதிகள் ஆகியவற்றுடன் சர்வதேச தராதரத்துக்கு மேம்படுத்தி தருவார் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் ஸ்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

2008 – 2009 கால பகுதியில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக பணியாற்றியவர் சந்திரசிறி. இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர் வட மாகாண ஆளுனராக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டவர்.

வடக்கின் புதிய ஆளுனராக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவால் இவர் நியமிக்கப்படலாம் என்று ஊகங்கள் வெளியாகி இருந்த நிலையில் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் ஸ்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் நாம் இவரை தொடர்பு கொண்டு பேசியபோது இவர் தெரிவித்தவை வருமாறு

நான் ஒரு தசாப்த காலத்துக்கு மேல் வட மாகாணத்தில் கடமையாற்றி இருக்கின்றேன். வட மாகாண மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்து கொடுத்து இருக்கின்றேன். வட மாகாண மக்கள் நல்லவர்கள் மாத்திரம் அல்லர் வல்லவர்களும் ஆவர். மிகுந்த பிரயாசைக்காரர்கள்.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் ஸ்தாபனத்தின் தலைவராக கிடைத்து உள்ள புதிய நியமனத்தின் மூலம் பொதுவாக இந்நாட்டு மக்களுக்கும் விசேடமாக வட மாகாண மக்களுக்கும் மீண்டும் சேவையாற்றுவதற்கான மகத்தான வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது.

நான் இந்த ஸ்தாபனத்தின் தலைவர் என்கிற வகையில் வட மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விரைவில் வருகை தருவேன். கடந்த ஜனாதிபதி தேர்தலை ஒட்டி அவசர அவசரமாக பிரகடனப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை உண்மையிலேயே சர்வதேச தராதரத்துக்கு மேம்படுத்தி தருவேன். அத்துடன் எனது ஸ்தாபனத்தில் வட மாகாணத்தை சேர்ந்த இளையோர், யுவதிகளை கணிசமான எண்ணிக்கையில் பொருத்தமான பதவிகளுக்கு நிச்சயம் உள்ளீர்ப்பேன்.