வட மாகாணசபையின் முன்னாள் பிரதமசெயலாளர் விஜயலக்சுமிக்கு அமைச்சு செயலாளர் பதவி!!
இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் இன்று நியமிக்கப்பட்டனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதில் தமிழ் பேசும் மூவரும் அடங்குகின்றனர்.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகமும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி ரமேஷ் விஜயலக்சுமி மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.ஐ.அமீர் ஆகியோர் தமிழ் பேசுபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் நியமனத்திலும் மூத்த தமிழ் அதிகாரியும் மீள்குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளருமான சிவஞானசோதிக்கு இராஜாங்க அமைச்சின் செயலாளர் பதவியும் வழங்கப்படவில்லை.
இடைக்கால அரசில் இராஜாங்க அமைச்சர்களாக 38 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமிப்பதற்கான அனுமதியைப் பெற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவையில் பத்திரம் ஒன்றை முன்வைத்தார். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் 32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

