மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய ஒருவர் பலி
மட்டக்களப்பு கல்முனை வீதியிலுள்ள கல்லடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிஸார் உட்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று (26) மதியம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி, வேலூர் 4 ம் குறுக்கு காளிகோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சப் இன்பெஸ்டர் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று மதியம் 1 மணியளவில் கடமை நிமித்தமாக காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது, கல்லடி இலங்கை வங்கிக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட வீதி வளைவு பகுதியில் இடது பக்கத்தில் இருந்து திடீரென வலதுபக்கம் வீதி வளைவு பகுதிக்கு சம்பவத்தில் உயிரிழந்தவர் அவரது மகனானுடன் மோட்டார் சைக்கிளை திருப்பும் போது எதிரே வந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் மற்றும் பொலிஸார் உட்பட 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

