மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த கணவன் மனைவிக்கிடையே இன்று புதன்கிழமை (18) காந்தி பூங்காவின் வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரனுக்கும் கணவருக்கும் இடையே பெரும் சண்டை இடம்பெற்றதுடன் மைத்துனர் மீது காரை செலுத்தி முட்டி மோதிய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி மைத்துனர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
பார் வீதியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனைவி யார் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சம்பவ தினமான இன்று நீதிமன்றத்தில் இடம்பெற இருந்த வழக்கு விசாரணைக்கு மனைவி அவரது சகோதரனுடனும் கணவன் தனியாகவும் நீதிமன்றத்துக்கு சென்று ஆஜராகினர். வழக்கு அதனை திகதியிடப்பட்ட நிலையில் மூவரும் நீதிமன்ற கட்ட பகுதியில் இருந்து வெளியேறி நீதிமன்ற வாகன தரிப்பிடமான காந்தி பூங்கா பகுதிக்கு வந்துள்ளனர்.
இதன்போது கணவன் மைத்துனரை தாக்க முற்பட்டு இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் விலக்கி விட்டனர். அதன் பின்னர் அங்கு மைத்துனன் மீது காரால் மோதியதையடுத்து கார் மீது மைத்துனன் தாக்குதல் நடத்தியதில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் 3 பேரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதுடன் காரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.




