இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புக்கு எதிராகப் பொலிஸார் முன்னெடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ‘வீரகெட்டிய லாரா’ (இந்திக பிரசாத்) என்பவருக்குச் சொந்தமான சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வீடு முடக்கப்பட்டுள்ளது.
தங்காலை – வீரகெட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தப் பிரம்மாண்ட வீட்டைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தைக் கொண்டே இந்த வீடு வாங்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்து முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டை விற்பனை செய்வதற்கோ அல்லது வேறு நபர்களுக்குக் கைமாற்றுவதற்கோ முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனக விதானகேவின் நேரடிக் கண்காணிப்பில் இந்தச் சோதனை மற்றும் முடக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டின் நுழைவாயில் மற்றும் மேல் மாடியில் அதிகாரப்பூர்வ அறிவித்தல் பலகைகள் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ள நிலையில், ‘லாரா’வின் ஏனைய மறைமுகச் சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன.
போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சொத்து சேர்ப்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.




