பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் செப்டம்பரில் இரத்துச் செய்யப்படுமாம்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான வரைவு அடுத்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச. செய்வது குறித்து எங்கள் கொள்கை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான வரைவை வர்த்தமானியில் வெளியிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது தேசிய மக்கள் சக்தி கொள்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன தலைமையிலான விசேட குழுவின் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும் அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்போது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இனவெறி மதக் குழுக்களை குறிவைக்க இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். தற்போது பாதாள உலகத்தை அடக்குவதற்கு இது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

