புதினங்களின் சங்கமம்

இரத்தினபுரியில் சிகிச்சைக்கு சென்ற சிறுவன் வைத்தியரால் துஸ்பிரயோகம் – 7 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு

சிகிச்சைக்கு வந்த சிறுவனை பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வைத்தியரை குற்றவாளியாக இனம்கண்ட இரத்தினபுரி மேல் நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இரத்தினபுரி, கில்லிமலை மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய அனுரா லியானராச்சி என்பவரே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2006இல் இந்த குற்றம் இடம்பெற்றது. காலில் காயமடைந்த 16 வயதான சிறுவன் ஒருவன், தனது சகோதரனுடன் வைத்தியசாலைக்கு சென்றான். எனினும், அப்போது வைத்தியர் கடமையிலிருக்கவில்லை. வைத்தியருக்குரிய தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். வைத்தியசாலை பணியாளர்களின் தகவலின் பிரகாரம், வைத்தியரின் தங்கும் விடுதிக்கு சிறுவர்கள் சென்றனர்.

காயமடைந்த சிறுவனை தங்கும் விடுதியின் உள் அறைக்குள் அழைத்து சென்ற வைத்தியர், அவனது உடலை பரிசோதிக்க வேண்டுமென கூறி, படுக்க வைத்துள்ளார். பின்னர் மாணவனின் ஆடைகளை களைந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றார். வைத்தியரின் பிடியிலிருந்து தப்பியோடி வந்த சிறுவன், சகோதரனுடன் அங்கிருந்து ஓடித்தப்பினான்.

விடயத்தை பெற்றோர்களிடம் தெரிவிக்க, அவர்கள் பொலிசில் முறையிட்டனர். இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 13 வருடங்களாக நடந்து வந்தது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நீதிபதி தீர்ப்பளித்தார். நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை நிரூபித்ததாகவும், வைத்தியர் குற்றவாளி என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன் அரச சட்டவாதி ருவினி இடமல்கொட நீதிமன்றத்தில் உரையாற்றினார்.

சிறு குழந்தைகளுக்கு என்ன நடந்தாலும் அது ஒரு குற்றம். “நீதித்துறை இந்த விஷயத்தை தீவிரமாக ஆராய்ந்து, குழந்தைகளை காப்பாற்றுவதன் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் மற்றும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” என்று அவர் கூறினார்.

வைத்தியருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.