புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் ‘காளி அம்பாள் 2’ படகு விபத்துக்குள்ளானது – 38 பேர் பாதுகாப்பாக மீட்பு!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்து 38 பேர் கடற் படையினரின் விசேட நடவடிக்கையின் போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் உள்ள குறிகட்டுவான் படகுத் துரையில் இருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று நெடுந்தீவு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

குறித்த காரணத்தினால் படகுக்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஆபத்தில் இருப்பதாக வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்துக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்து கப்பல்கள் மற்றும் சிறிய படகுகளை பயன்படுத்தி விபத்தில் சிக்கிய படகையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும், கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கையின் காரணமாக, பெரும் உயிர் மற்றும் பொருள் சேதங்களை தவிர்க்க முடிந்ததது.

‘காளி அம்பாள் 2’ படகு நெடுந் தீவின் துறைமுக நுழைவாயிலில் மூழ்கியிருந்தால், நெடுந்தீவின் அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.