பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்கபட மாட்டாது
பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதில்லை என பிரிமா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலை கூட்டப்பட்டிருப்பதாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்திகள் வெளியானதைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமை மா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட விரோதமாக விலையதிகரிப்பைச் செய்வதனூடாக நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவோர் தொடர்பாக கண்காணிக்குமாறு அவர் கடந்த 11ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு 2003ஆம் ஆண்டு 60ஆம் பிரிவின் 9ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், 5000 – 50,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

