சிவாஜிலிங்கத்துக்கு அந்த நோய் உள்ளதாம்!! போட்டுடைத்தார் மாவை!!
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு “தேர்தலில் போட்டியிடும் நோய்” உள்ளது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பரப்புரைக் கூட்டம் இன்று (13) மாலை நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்ததாவது:
2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுதும் போட்டியிடுகிறார். போட்டியிடாவிட்டால் உயிரைவிட்டு விடுவார். அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு மருந்தில்லா விட்டாலும், பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான். அவர் பெரியளவில் வாக்கெடுக்காவிட்டாலும், இன்று தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. போட்டி பலமானது.
2015ஆம் ஆண்டு இருந்ததைவிட மாறுப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று நாங்கள் அனைவரும் உள்ளோம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்.
இப்போதும் ஒரு தரப்பினர் தேர்தலை புறக்கணிப்போம் என்கிறார்கள். 2005ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையில் அதிகாரத்தை தருவதாக கூறினார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதே போன்ற ஒரு நிலமையே இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் சஜித்துடன் உடன்படிக்கை செய்யவில்லை. ஆனால் ராஜித, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுடன் சம்பந்தனும், சுமந்திரனும் பேசினார்கள். சஜித்தும் எதுவும் பேசவில்லை. ஆனால் சஜித் பிரேமதாச பொருத்தமான நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் – என்றார்.

