புதினங்களின் சங்கமம்

வவுனியாவிலிருந்து யாழ் வந்த அரச பேரூந்தில் நடந்த ரணகள சண்டை!! வயதுக்கு வந்தவர்கள்மட்டும்!!

அரச பேருந்தில் ரணகளமாகிய #சாவகச்சேரி #சங்கத்தானை #சண்டை

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று மாலை பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் நடைபெற்ற சுவாரசியமான சண்டை இது

#பயணி – நான் எங்கு ஏறினேன்
நடத்துனர் – வவுனியாவில்

#பயணி – எங்கு இறங்குவதாக கூறினேன்
நடத்துனர் – சங்கத்தானையில்

#பயணி – ரிக்கெற்றில என்னெண்டு போட்டிருக்காய்
நடத்துனர் – சாவகச்சேரி எண்டு

#பயணி – நான் எங்க இறங்குறது எண்டு சொன்னன். நீ எங்க இறங்குறதுக்கு ரிக்கற் தந்திருக்கிறாய். என்ன ? என்னட்ட காசடிக்கப் பார்க்கிறியோ ?

நடத்துனர் – ரிக்கற் மிசினில சாவகச்சேரிக்குத்தான் ரிக்கற் வரும். சங்கத்தானைக்கு இல்லை

#பயணி – அப்போ சங்கத்தானைச் சனம் பஸ்சில போறேல்லயோ

நடத்துனர் – சங்கத்தானை சாவகச்சேரிக்குள்ள தானே இருக்கு, இரண்டுக்கும் ஒரே ரிக்கற்தான்

#பயணி – எனக்கு அது தெரியாது. எனக்கு சங்கத்தானை எண்டு போட்டு ரிக்கற் தா ? இல்லாட்டிக்கு நீ காசு அடிச்சனி எண்டு கெம்பிளைன் பண்ணுவன்.

நடத்துனர் – (கொஞ்சம் சூடாகி) நீர் கெம்பிளைன் பண்ணுறதெண்டா பண்ணும்.

#பயணி – நான் இதைச் சும்மா விடமாட்டன். நீ இப்ப எனக்கு சங்கத்தானை எண்டு போட்டு ரிக்கற் தரணும். இல்லை எண்டா பஸ்சுக்குள்ள பெரிய பிரச்சனையாகும்.

நடத்துனர் – இந்தா உன்ர காசு. நீர் இண்டைக்கு பஸ்சில போறத்துக்கு காசு தரவேண்டாம். நான் என்ர காசைப் போட்டுக் கட்டுறன். சும்மா தொந்தரவு செய்யாம இரு சீற்றில இரும்.

#பயணி – ஏன்ரா டேய். சங்கத்தானைக்கு ரெயில் ஓடுது. சங்கத்தானியில ரெயில் நிக்குது. சங்கத்தானை எண்டு போட்டு ரிக்கற் தாறான். உனக்கு சங்கத்தானை எண்டு போட்டு ரிக்கற் தர ஏலாதோ.

நடத்துநர் – மிசினில சங்கத்தனை எண்ட. ஒப்சன் இல்லை. இருந்தா தருவன்தானே. சாவகச்சேரி ரிக்கற்தான் சங்கத்தானைக்கும். காசு கூட குறைய எண்டு இல்ல. சொன்னா விளங்கிக்கோ.

#பயணி – ஏன் நாங்கள் விளக்கம் கெட்ட ஆக்களோ. சங்கத்தானைக்கு தனிய றெயில்வே இஸ்ரேசன் கூட இருக்கு. பெரிசா போட் எல்லாம் நட்டிருக்கிறானுகள். பஸ் ஓடுற உங்களுக்குத்தான் கொழுப்பு. திமிர். ஒரு இடத்தில ஏறுறத்துக்கு கையைக் காட்டினா நிப்பாட்ட மாட்டியள் முறுக்கிக்கொண்டு ஓடுவியள்.

நடத்துனர் – (சக பயணிகளை நோக்கி) பஸ் கொண்டெக்டருக்கு பிரச்சினையள் இருக்காதோ. எங்களுக்கும் ஆயிரம் பிரச்சினையள் இருக்கும். வீட்டுக் கஸ்ரம் அது இது எண்டு பிரச்சினையளோடதான் தொழில் செய்யிறம். ஆனா அதுகளைக் காட்டிக்கொடுக்காம பஸ்சில ஏறுற ஆக்களோட முகம் சுழிக்காம சிரிச்சு கதைச்சு நடந்துகொள்ளுறம். இப்பிடி விதண்டாவாதம் செய்யிற ஆக்களை என்ன செய்யிறது.

#பயணி – என்ன நான் விதண்டாவாதம் சொய்யிறனோ. உன்னைச் சும்மா விடமாட்டன். எனக்கு சங்கத்தானை எண்டு போட்டு ரிக்கற் தரணும். இல்லை எண்டா பஸ்சை பொலிஸ் ரேசனுக்கு விடு. நான் அங்க கதைக்கிறன்.

நடத்துனர் – ஓ… பொலிஸ்ரேசனுக்கு பஸ்சை விடச் சொல்லுறன். நீ தான் பொலிசிட்ட அடிவாங்குவாய்.

#பயணி – ஏன் உனக்கு பொலிசில செல்வாக்கு இருக்கோ. நான் கொழும்பில முறையிடுவன். உன்னை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டன். மோசடிக்காறன் நீ.

நடத்துனர் – (பொறுமை இழந்தவராக) என்னடா சொல்லுறாய். நானும் பொறுத்துப் பொறுத்துப் போனா நீ கேட்க மாட்டன் என்கிறாய். றெம்ப ஓவறாய்ப் போறாய். எனி ஏதும் கதைச்சாய் எண்டாய் வெழுவை வேண்டுவாய்.

#பயணி – ஓ.. நீ என்னில கை வச்சுப்போடுவியோ. உனக்கு என்னை ஆர் எண்டு தெரியேல்ல. நான் என்ர பவறைக் காட்டுவன். அப்ப உனக்கு நான் ஆர் எண்டு தெரியும். (என்றவாறு நடத்துனரை தனது தெலைபேசியில் படம் பிடிக்க முற்படுகிறார்.)

நடத்துனர் – (இதனால் கடும் கோபமடைந்தவராக) என்னடா எருமை என்னைப் படம் எடுக்கிறாய். ( என பேசியவராக தொலைபேசியைத் தட்டி தன்னைப் படம் எடுப்பதைத் தடுக்கிறார்)

அதன்போது சங்கத்தானையும் வந்துவிட குறித்த பயணியைத் தள்ளி இறக்கிகொண்டு பேசாமல் வா என்றவாறு இன்னொரு பயணி இறங்கி நடக்கிறார்.

குறித்த பயணியோ பஸ்சை நோக்கி கைகாட்டி உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டன்ரா. நான் யார் எண்டு உனக்குக் காட்டுவன் என்றவாறு நடக்க ஆரம்பிக்கிறார்.

சம்பவம் நடைபெற்ற நாள் – 08.11.2019
நேரம் – பிற்பகல் 3.00 மணி முதல் 04.00 மணி வரை

அருமைத்துரை யசீகரன்