பெண்களின் மார்பகம் என்பது ஆண்களுக்கு என்றுமே போதை தருவது…இச்சைக்குரியது!!

பெண்களின் மார்பகம் என்பது ஆண்களுக்கு என்றுமே சுவாரஸ்யமானதாகவும், இச்சைக்குரியதாகவும் இருந்துவருகிறது. கல்லூரி நாட்களில், பெண்ணின் உடல் அமைப்பு சார்ந்த கூறுகளைப் பற்றிப் பேசும் ஒரு கவிதையை நடத்திவிட்டு, பேராசிரியர் அது தொடர்பான விவாதம் ஒன்றைத் துவங்கினார்.

அதற்குப் பதில் கூறும்விதமாக ஆண் நண்பன் ஒருவன், தனது கருத்தை இவ்வாறாகப் பதிவு செய்திருந்தான். சிறு வயதில், தேவாலயத்திற்குச் செல்லும்போது அங்கு தீட்டப்பட்டிருந்த ஏவாளின் படம் ஒன்று இருந்ததாகவும், அதில் ஏவாளின் மார்பகங்களை, அவளின் கூந்தல் மூடியிருந்ததாகவும், அவளின் கூந்தலுக்குப் பின்னால் என்ன மறைக்கப்பட்டு இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்துடன், அந்தப் படத்தின் பின்புறம் சென்று பார்த்து, எதுவும் இல்லாமல் போக ஏமாந்திருக்கிறேன் என்றும் கூறினான். வகுப்பறையில் நீண்ட நேரம் சிரிப்பொலி அடங்கவில்லை.

இவ்வாறாக, சிறு வயது தொடங்கி முடி நரைத்த பின்னும்கூட, பெண்களின் மார்பகம் சார்ந்த ஆர்வமும், அதன் மேலுள்ள இச்சையும், அநேகமான ஆண்களுக்கு என்றும் குறைவதே இல்லை. ஆனால், பெண்களின் மார்பகம் பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு சுமையாகவே இருந்து வருகிறது.

அமரந்தாவின் ‘பால்கட்டு’ என்னும் கதையை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, அலுவலகம் செல்லும் பெண் ஒருத்திக்குக் குழந்தை பிறக்கிறது. தினமும் பகல் பொழுதில் பணிக்குச் செல்வதால், குழந்தைக்குப் பாலூட்ட முடியாமல் பால் கட்டிவிடுகிறது. கட்டிய பால் கெட்டுவிடும் என்பதால் குழந்தையும் அதைக் குடிக்க மறுக்கிறது. வலி தாங்க முடியாத அந்தப் பெண், கட்டிய பாலை வெளியேற்றுவதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கு வயது முதிர்ந்த செவிலிய பெண் ஒருத்தி, ஒரு பம்பின் மூலம் அந்தப் பாலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, அந்த பம்பினால் மார்பகங்கள் காயப்பட்டு, கூடுதல் வேதனையில் கதறுகிறாள். அவள் கதறலைப் பார்த்து மனம் பொறுக்காத செவிலியப் பெண், ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா’ என்று கூறி, தனது வாயால் கட்டிய பாலை உறிஞ்சி எடுத்துக் கீழே துப்புகிறாள்.

அதற்குப் பின்னும், அந்தத் தாய் பல துன்பங்களை சந்திக்க வேண்டியதாகிறது. பணி இடைவேளைகளில் கழிவறைக்குச் சென்று, தனது மார்பில் இருந்து பாலை வெளியேற்றுவது துவங்கி, அதன் ரணங்களைப் பொறுத்துக்கொள்வது வரை, பல சோதனைகளைத் தாண்டி வருகிறாள் அந்தப் பெண்.

ஆனால், இது பற்றி எதுவுமே அறியாதவனாக இருக்கிறான் அவளது கணவன். ஒருநாள் மாலை பணிமுடிந்து அவள் திரும்பும்போது குழந்தைக்குப் பால் தரும் அவசரத்தில், அவள் வீட்டு வராந்தாவிலேயே பாலூட்ட ஆரம்பித்துவிடுகிறாள். அதைக் கண்டு கோபமுறும் கணவன், ‘உனக்கு அறிவில்லையா? வராண்டாவிலேயே பால் குடுக்கணுமா? பெட்ரூம்ல போய் குடுத்தா என்ன? யாராவது வந்தா என்ன நினைப்பாங்க?’ என்று திட்டுகிறான். அவளும் குழந்தையுடன் உள்ளறைக்குப் போகிறால்

பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள், குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினைகள் குறித்த புரிதலும், அறிவும்கூட இன்று நிறைய ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்களின் மார்பகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு முற்றிலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இது பற்றி எதுவுமே தெரியாமல் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களை, ‘இளநீர், பெரிய காய், பால்குடம், பால் பண்ணை’ என்றும், மார்பகங்கள் மிகச் சிறியதாக உள்ள பெண்களை, ‘இஸ்திரிப் பெட்டி, எல்இடிடிவி’ என்றெல்லாம் கிண்டல் செய்து மகிழும் பெரும்பாலான ஆண்களை ஒவ்வொரு நாளும் பெண்கள் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் பலர், இவர்களுக்கு பயந்து கனமான உள்ளாடைகளை அணிந்து மூர்ச்சையாகி விழுவதையும்கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும், மாதவிடாயின் போது மார்பகங்களில் ஏற்படும் வலியையும், குழந்தை பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அது சார்ந்து மார்பகங்களில் வரும் பிரச்சினைகளையும், எத்தனை ஆண்கள் அவர்களின் மனைவியிடமும் அல்லது அவர்களைச் சார்ந்த மற்ற பெண்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்காட்டுகிறார்கள் என்பதையும், எத்தனை பெண்கள் இது குறித்த பிரச்சினைகளைக் கணவனிடம் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனர் என்பதையும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ‘இதெல்லாம் போயா சொல்லிட்டு இருப்பாங்க?’ என்று பெண்களும், ‘இதக்கூடவா கேக்கணும்?’ என்று ஆண்களும் இருக்கும்வரை, பெண்களின் பிரச்சினைகள் ஆண்களுக்கு எப்படி விளங்கும்?

பெண்களின் மார்பகம் என்பது ஆபாசம் அல்ல, காமத்துக்கான பண்டம் அல்ல, இயற்கை என்பதை உணர்த்துவதில் பெண்களின் பங்களிப்பு கூட வேண்டும். அதை உணர்ந்துகொள்ள ஆண்களும் முற்பட வேண்டும். இவ்வகை பரஸ்பரப் பகிர்தலும் அறிவும் ஆண்களுக்குப் பெண்களின் வலிகளையும், பிரச்சினைகளையும் உணர்த்திவிடும் பட்சத்தில், அவர்களின் கிண்டல்களும் கேலிகளும் குறைந்து, பெண்களின் உடல் சார்ந்து இயற்கையானதொரு மரியாதை தோன்றும்.

அந்த மரியாதை பெண்களுக்குமானதாய் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

இன்னும் பறக்கலாம்!

என்றும்
அன்புடன்
ஸ்டார் மணி

error

Enjoy this blog? Please spread the word :)