வவுனியாவில் புராதன பிள்ளையர் ஆலயத்தை துப்பரவு செய்தவர்கள் பொலிசாரால் கைது!!
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார், கன்னியா,
வெடுக்குநாறி ஆலயங்களின் வரிசையில், வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள
காட்டு விநாயகர் ஆலயத்திலும் சர்ச்சை உருவாகியுள்ளது. புராதான சின்னங்கள்
உள்ள அந்த பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தை மாளிகைப்பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் அந்தப் பகுதி
மக்களால் நீண்டகாலமாக வழிபடப்பட்டு வருகிறது. ஆலயத்தின் கட்டடம்
நீண்டகாலமாக அமைக்கப்படாத நிலையில், சிலை ஒன்றை வைத்து மக்கள் நீண்ட காலமாக
வழிபட்டு வந்துள்ளனர்.
ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் பண்டையகால கருங்கல் படிமங்கள், சுவடுகள்,
தூண்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில்
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஆலய வளாகப்பகுதியில் மக்களால் டோசர் மூலம்
துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பகுதியில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதாகவும் புராதன சின்னங்களை
அளிக்கும் வகையில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த
பகுதியிலுள்ள பௌத்த பிக்குவொருவர் தொல்லியல் திணைக்களத்தில்
முறையிட்டதாகவும், பொலிசார் அசமந்தமாக இருப்பதாகவும் சில வாரங்களின்
முன்னர் சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன.
பொலிசாருக்கு தொல்பொருள் திணைக்களத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த
முறைப்பாட்டுக்கு அமைய கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆலயத்தின்
நிர்வாகத்தை பொலிசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு விடுவித்திருந்தனர்.
மீண்டும் அவர்களை விசாரணைக்கு அழைத்த ஓமந்தை பொலிஸார் ஆலயத்தின்
நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன், ஆலயத்தின் அருகில்
அமைந்துள்ள காணியின் உரிமையாளரையும் நேற்று முன்தினம் கைது செய்து வவுனியா
மேல் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவர்கள் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக தாம் வழிபடும் ஆலயத்தை அகற்ற தொல்பொருள் திணைக்களம் முயற்சிப்பதாக, அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

