வவுனியா பொதுமருத்துவமனை : நுளம்புகள் விற்பனைக்கு..!!!(Photos)
தாயகத்தில் நின்ற குறுகிய காலத்தில் சில கவலைதரும் விடயங்களையும் அவதானிக்க முடிந்தது. அதில் ஒன்று….,
வவுனியா பொது மருத்துவமனையின் சுற்றுப்புற சூழல்…!!
மழை காரணமாக எங்கும் நீர் தேங்கி நிற்கிறது. பிரதான நுழைவாயிலில் ஒரு நோயாளர் காவுவண்டி வேகமாக உள்ளே நுழைகிறது. பக்கத்தில் நிற்கவே பயமாக இருந்தது. காரணம் தேங்கி நிற்கும் தண்ணீரை அது சிதறி அடிக்கிறது. வளாகத்தின் உள்ளே கூட நீர்தான்.
அத்துடன் எங்கும் குப்பை கூளங்கள். அவற்றைப் போட ஒழுங்காக குப்பைத் தொட்டிகள்கூட இல்லை. மருத்துவமனை சுற்றாடல் இப்படி இருந்தால் எப்படி நுளம்பு பரவாமல் இருக்கும்? எப்படி டெங்கு போன்ற கொடிய நோய்களை ஒழிக்க முடியும்?
நான்கு குப்பைத் தொட்டிகள் வைக்க எவ்வளவு செலவாகும்? அதற்குகூட பணம் இல்லையா? மழைவிட்டு பலமணி நேரமாகியும் நீர் தேங்கி நிற்கிறது என்றால், வடிகால் அமைப்பு சபையின் வேலைதான் என்ன?
சரி வெளிப்புறம்தான் இப்படியாக்கும் என்று மருத்துவமனையின் உள்ளே சென்றால்…. புத்தம் புதிய கட்டிடம், நிலமெங்கும் மாபிள்..! ஆனால் என்ன பிரியோசனம்?
பல நாட்களாக ‘மொப்’ பண்ணுப்படாமல் மாபிளின் கலரே மங்கியிருந்தது. நிலத்தில் இரத்தம் முதலான பல கறைகள். பார்க்க கவலையா இருந்தது. ‘பாதணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே வரவும்’ என்று போர்டு வைத்திருக்கிறார்கள். நம்பி ‘சப்பாத்தைக் கழற்ற’ பயமா இருந்திச்சு.
வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டு, கொழுப்புக் கதை கதைப்பதாக நினைக்க வேண்டாம்.
மருத்துவமனைச் சூழலே இப்படி இருந்தால் நாட்டின் மற்றைய இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது எப்படி..???
வவுனியாவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள், கட்சிகள், அமைப்புக்கள் யாராவது முன்வந்து மருத்துவமனைச் சுற்றாடலைச் சுத்தம் செய்யலாமே..???













