ஜே.ஶ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு
ஸ்ரீலங்காவின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மிக நெருக்கமான நபராக அடையாளப்படுத்திக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கான அதிரடி உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் இன்று பிற்பகல் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன ஐ.பீ.சீ தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஜயமினி புஷ்பகுமார என்கிற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவத்திற்காகவே ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி மஹிந்த ராஜபக்சவின் கடந்த அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவே இந்த விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.
அதேபோல விபத்தின் போது ஸ்ரீரங்காதான் வாகனத்தை செலுத்தியதாக எழுந்திருந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்திருந்தார். இந்த நிலையில் விபத்தின் போது ஊடகவியலாளர் ரங்காதான் வாகனத்தை செலுத்தியதாகவும், அவருக்கு அருகே அமர்ந்து அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் பயணித்திருப்பதாகவும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு இணங்க குற்றவியல் சட்டக்கோவையின் 298ஆம் இலக்கத்திற்கு அமைவாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான உத்தரவை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

