வடமாகாண நிதி திரும்பிச் செல்கிறது என்ற கதையும் நிதி ஒதுக்கீடும்- உண்மை என்ன?
வடமாகாணத்துக்கு ஒதுக்கப்படுகிற நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பப்படுகிறது என்ற பிரச்சாரத்துக்குப் பின்னால் உள்ள ஆபத்துக்கள் பற்றி, விபரம் தெரியாத செய்தியாளர்கள் பலருக்குப் புரிவதில்லை.
யதார்த்தம் புரியாத சில தமிழ் கல்வியாளர்கள் கூட நிதி பயன்படுத்தப்படுவதில்லை எனக் குற்றம் சுமத்தி அல்லது முகநூலில் நகைச்சுவையாக்கி தமிழ் அரச அதிகாரிகளை குறை கூறுகின்றனர். எண்பது வருட அரசியல் போராட்டத இலக்கை மலினப்படுத்துகின்றனர்.
இதன் உண்மைத் தன்மை பற்றி அரச அதிகாரிகள் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு கருத்துக் கூற முடியாது. அல்லது மேடைப் பேச்சுகள் அல்லது பொதுவெளியில் கூட அரச அதிகாரிகளினால் கருத்துக் கூறவும் முடியாது. ஏனெனில் அவர்கள் அரச இரகசியங்களை பாதுகாக்கும் பொறுப்புடையவர்கள்.
தங்கள் மனட்சாட்சிக்கு இது பிழை என்று தெரிந்தாலும் அரச அதிகாரிகளினால் எதுவுமே செய்ய முடியாது.
ஓய்வு பெற்ற பின்னர் கருத்து வெளியிட்டால் அதற்கு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படும்.
ஆகவே, நிதி திரும்பிச் செல்கிறது என்ற திரிபுபடுத்தலை தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஆதாரங்களோடு பகிரங்கப்படுத்த வேண்டும். அதனை ஆதாரமாகக் கொண்டு செய்தியாளர்கள், அரசியல் – பொருளாதார ஆய்வாளர்கள் இது பற்றிய விடயதானங்களை வெளிப்படுத்த வேண்டும்.
உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது இலகுவான காரியம்.
ஆனால் பிரச்சினை என்னெவென்றால், உள்ளக கட்சி அரசியல் போட்டிகளினால் நிதி பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துப் பேசுவதைத் தவிர்க்கின்றனர். அல்லது அக் குற்றச்சாட்டை அரசியல் நோக்கில் மேலும் மெருகூட்டி விடுகின்றனர்.
சில உறுப்பினர்களுக்கு அது பற்றிய கணக்கு அறிக்கைகளை வாசித்து விளங்கிக் கொள்ள முடிவதுமில்லை. இக் காரணகளால் உண்மைகள் மறைக்கப்படுகிறன.
ஆனால், அரச தரப்பு திட்டமிட்டு அக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னெடுத்து நியாயப்படுத்தியும் வருகிறது. அதுவும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் விளக்கமேயில்லாத சில செய்தியாளர்கள் ஊடாகவுமே அரசாங்கம் திட்டமிட்டு இப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது.
அரசாங்கத்தின் திட்டமிட்ட இச் செயற்பாடுகளினால் சில தமிழ் அரச அதிகாரிகள் செயல் திறன் அற்றவர்களாகவும் மாறியுள்ளனர். வேறு சில அதிகாரிகள் சோம்பேறிகளாகவே பதவிக் காலத்தைக் கடத்துகின்றனர்.
ஆகவே, அரச அதிகாரிகள் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறார்கள் என்பதல்ல இங்கே பிரச்சினை. கொழும்பை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சி முறைமையில் உள்ள கோளாறுகள் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்துக்கு மூல காரணம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும்.
அதாவது ‘நிதி’ – ‘நீதி’ – ‘நிர்வாகம்’ என்ற இந்த மூன்று அரச இயந்திரங்களும் கொழும்பை மையப்படுத்தியே உள்ளன.
வரவு செலவு திட்டத்தில் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும், அந்த நிதி உரிய காலத்துக்குள் முழுமையாக வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக,
இந்த ஆண்டு ஆறாயிரம் மில்லியன் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 7 ஆயிரத்து 190 பில்லியன். பற்றாக்குறை 2 ஆயிரத்து 200 பில்லியன் ஆகும்.
ஆகவே, வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அரச செலவினங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்படவுள்ள அந்த நிதியில் குறைப்பு செய்யலாம். அல்லது குறித்த நிதியை வடமாகாணத்துக்கு விடுவிக்காமல் இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை மாத்திரம் வழங்கலாம்.
அவ்வாறு வழங்கப்படும்போது வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் குறித்த அபிவிருத்தித் திட்டம் செயலிழக்கும்.
உதாரணமாக,
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 500 மில்லியன்தான் வழங்க முடியும் என்றால், அத் திட்ட வரைபு மாற்றியமைக்கப்படும் அல்லது வேறேதும் செலவுகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும்.
அவ்வாறு பயன்படுத்தினால் 500 மில்லியன்தான் செலவிடப்பட்டுள்ளது மிகுதி 500 மில்லியன் பயன்படுத்தப்படாமல் திரும்பிவிட்டது என்று சில தமிழ் உறுப்பினர்களே சுட்டிக்காட்டுக்காட்டுவார்கள். அதனை நகைச்சுவையாக வேறு காட்டுவார்கள்.
ஆனால், இக்கதைகள் தமிழர்களின் அரசியல் உரிமையை இல்லாதொழிக்க கட்டவிழ்த்து விடப்படுகின்ற நச்சு விதைகள் என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட தமிழ் அரச அதிகாரிகளினால் முடியாது.
அப்படி துணிந்து சுட்டிக்காட்டினால் அந்த அதிகாரி இடமாற்றப்படுவார். அல்லது வேறு குற்றச்சாட்டில் பதவி நிலை தரமிறக்கப்படுவார்.
ஆகவே, உணர்ந்து கொள்ளுங்கள். மூல அரசியல் பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லாமல் ”அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு” என்ற அரசாங்க மாயைகளுக்குள் விழுந்து, தமிழ் அரச அதிகாரிகளினுடைய செயற்திறன் அற்ற பிரச்சினையாக மாத்திரம் மாற்றும் அரச திட்டத்துக்குத் துணை போக வேண்டாம்.
இப்போது கூட ”வடமாகாண பிரச்சினை“ ”வடமாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடு” என்றுதான் பிரச்சாரப்படுத்துகிறது அரசு. ஏனெனில் கிழக்கு மாகாணத்தைத் தங்கள் பிரதேசமாக்கிவிட்டனர். ஆகவே, ஆபத்து எங்கிருக்கிறது என்று புரிகிறதா?
அ.நிக்ஸன்
பத்திரிகையாளர்.
