மன்னார் புதை குழி மண் போட்டு மீ்ண்டும் மூடப்படுகின்றது!! காரணம் என்ன??
மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாால் அடையாளம்
காணப்பட்ட மனித எச்சங்களை விரைவாக தோண்டி எடுக்காமல் இருந்தால், அவை சேதமாகும்
என்பதால், அவற்றின் மீது மண் போட்டு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ
நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உள்ளிட்ட தரப்பினருடன் நேற்றிரவு இடம்பெற்ற
சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் மறு அறிவிப்பு செய்யப்படும் வரை கடந்த மார்ச்
மாதம் 8ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்
ஊடாக வெளியான அறிக்கையின்படி, இந்தப் புதைகுழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு
சொந்தமானவை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனித எச்சங்கள் கிறித்துவுக்கு பின் 1477 – 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு
இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு வெளியான அறிக்கை குறித்து ஆராய்ந்த மன்னார் நீதிவான், அகழ்வு பணிகளை
இடைநிறுத்துமாறு கடந்த 8ஆம் திகதி உத்தரவிட்டார்.
இதன்படி, இந்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகளை தொடர்வது குறித்து நேற்றிரவு
நீதிவான் தலைமையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சிறப்பு சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின்
முடிவுகளை வெளியிட மூன்று மாத கால அவகாசம் தேவை என தொல்பொருள் திணைக்களத்தின்
அதிகாரிகள் இந்த சந்திப்பில் கூறினர்.
அதன்படி, மன்னார் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு
இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“மன்னார் மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டு, தோண்டி எடுக்கப்படாமல் இன்னும்
இருக்கும் மனித எச்சங்கள், மூன்று மாத காலம் அவ்வாறே வைக்க முடியாத நிலமை காணப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை விரைவாக தோண்டி எடுக்காமல் இருந்தால், அவை
சேதமாகும் என்பதால், அவற்றை மீண்டும் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த
நடவடிக்கைகளுக்கு மேலும் இரண்டு வார காலம் தேவைப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 343 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளில் 30, சிறார்களுடையவை என்பதும்
அடையாளம் காணப்பட்டுள்ளன” என்றும் சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.