கற்பிட்டி வன்னிமுந்தலம களப்பில் பிரம்மாண்டமான கடல் பசு உயிரிழந்த நிலையில் மீட்பு!
கற்பிட்டி வன்னிமுந்தலம களப்பு பகுதியில் உயிரிழந்த நிலையில் சுமார் 500 கிலோவிற்கும் அதிக எடையுள்ள பிரம்மாண்டமான பெண் கடல் பசு (Dugong) ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கற்பிட்டி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் பசு சுமார் 11 அடி நீளம் கொண்டது என வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட குறுகிய கடல் பகுதியில் ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் சுற்றித் திரிந்த இந்த வகை உயிரினங்கள், உலகப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்புத் தரவுப் புத்தகத்தில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவை, இலங்கையின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
செழுமையாக வளர்ந்த கடல் புற்களை உணவாகக் கொள்ளும் இவை, குறிப்பாக HALOPHILA மற்றும் HALODULE வகை கடல் புற்களை விரும்பி உண்கின்றன.
ஒரு பெண் கடல் பசு இனப்பெருக்க முதிர்ச்சியை அடைய 10 முதல் 12 ஆண்டுகள் வரை எடுக்கும் என்பதுடன், 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு குட்டியை மாத்திரமே ஈனுகின்றன.
இவை காற்றைச் சுவாசிக்கும் பாலூட்டிகளாகும்.
கடந்த காலங்களில் மீனவர்களின் வலைகளில் சிக்கி சில கடல் பசுக்கள் உயிரிழந்திருந்தாலும், வன்னிமுந்தலம பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கடல் பசு, டைனமைட் போன்ற வெடிபொருட்களின் அதிர்வினால் உயிரிழந்திருக்கலாம் என வடமேல் பிராந்திய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் இசுரு கொட்டேகொட மேற்கொண்ட மரணப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கற்பிட்டி வனவிலங்கு அலுவலகத்தின் பிராந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் உபாலி குமாரதுங்க மற்றும் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கடல் பசுக்களைப் பாதுகாப்பது தொடர்பாக மீனவர்களுக்குப் பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், ‘லைலா’ அல்லது ‘சுருக்கு வலை’ மற்றும் டைனமைட் பயன்படுத்தி மீன்பிடிப்பது இவ்வாறான அபூர்வ உயிரினங்களின் அழிவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

