புதினங்களின் சங்கமம்

யாழில் மோட்டார் சைக்கிள் ஓடியவருக்கு 84 ஆயிரம் ரூபா தண்டம்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிள்
புகைபோக்கியை (Silencer) மாற்றியமைத்தமை உள்ளிட்ட 5 குற்றங்களைப் புரிந்த ஒருவருக்கு
84 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி
சைலவன் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர்
கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மன்றில் முன்னிலையானார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிள் சைலன்சரை உருமாற்றம் செய்தமை, வாகன
வரிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

5 குற்றச்சாட்டுக்களையும் எதிரி மன்றில் ஏற்றுக்கொண்டார்.
அதனடிப்படையில் குற்றவாளியாக அவரை அறிவித்த மன்று, மோட்டார் சைக்கிள் சைலன்சரை
உருமாற்றம் செய்த குற்றத்துக்கு 50 ஆயிரம் ரூபா தண்டமும் மதுபோதையில் வாகனம்
செலுத்தியமைக்கு 25 ஆயிரம் தண்டமும் ஏனைய 3 குற்றச்சாட்டுக்களுக்கும் 9 ஆயிரத்து 500
ரூபா தண்டமும் என மொத்தம் 84 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து உத்தரவிட்டது.

குற்றவாளி தண்டப்பணத்தில் ஒரு பகுதியை இன்றைய தினம் செலுத்த அனுமதித்த மன்று மீதியை
அடுத்த தவணையின் போது செலுத்துமாறு திகதியிட்டு வழக்கை ஒத்திவைத்தது.