புதினங்களின் சங்கமம்

பிருத்தானியாவில் இலங்கைத் தமிழனான கஜன் இந்திய தமிழ் இளைஞனை அடிமை என ஏசியதால் 2 கோடி அபராதம்! நடந்தது என்ன?

பிரித்தானிய KFC உணவகத்தில் இந்திய ஊழியரை “அடிமை” என விளித்த இலங்கை முகாமையாளர்!

தென்கிழக்கு லண்டனில் உள்ள KFC கிளை ஒன்றில், இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவரை “அடிமை” (Slave) என இனரீதியாக இழிவுபடுத்திய குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் எனக் கூறப்படும் அதன் முகாமையாளர் சிக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் முடிவில், குறித்த நிறுவனத்திற்கு சுமார் £70,000 (இலங்கை ரூபாவில் சுமார் 2 கோடியே 60 இலட்சம்) நஷ்டஈடு செலுத்துமாறு லண்டன் தொழில் தீர்ப்பாயம் (Employment Tribunal) உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இரு சமூகத்தினரிடையே இடம்பெற்ற இந்த இனப்பாகுபாடு குறித்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதேஷ் ரவிச்சந்திரன் என்பவர், 2023 ஜனவரி மாதம் லண்டன், வெஸ்ட் விக்காமில் (West Wickham) உள்ள KFC கிளையில் பணியில் சேர்ந்துள்ளார்.

பணியில் இணைந்து இரண்டு மாதங்களிலேயே அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதன்போது, அக்கிளையின் முகாமையாளராகப் பணியாற்றிய கஜன் தெய்வேந்திரம் என்பவர், சக ஊழியர் ஒருவரிடம் பேசும்போது, “தான் இலங்கைத் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும்”, மதேஷ் ரவிச்சந்திரனை சுட்டிக்காட்டி “இவன் ஒரு அடிமை” (This slave) எனவும் கூறியதை மதேஷ் செவிமடுத்துள்ளார்.

தீர்ப்பாயத்தின் கண்டுபிடிப்புகள் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி போல் அபோட் (Paul Abbott), முகாமையாளர் கஜன் தெய்வேந்திரம் பாதிக்கப்பட்டவர் மீது “இன ரீதியான பாரபட்சமான மனப்பான்மையை” (Racially prejudiced attitude) கொண்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், மதேஷ் ரவிச்சந்திரன் அதிகப்படியான நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதற்கும், அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டதற்கும் அவரது இனம் மற்றும் தேசியம் முக்கிய காரணமாக இருந்துள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவத்தால் மதேஷ் ரவிச்சந்திரன் மிகுந்த மனவேதனைக்கும் அவமானத்திற்கும் உள்ளானார். அவர் வேலையை இராஜினாமா செய்த பின்னரும், அந்த KFC கிளையை நிர்வகிக்கும் Nexus Foods Limited நிறுவனம் இது குறித்து முறையான விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை எனத் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

தீர்ப்பு மதேஷ் ரவிச்சந்திரன் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், நேரடி இனப்பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு £66,800 நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என Nexus Foods Limited நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், பணியிடத்தில் பாகுபாடுகளைத் தடுப்பது குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயப் பயிற்சித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துமாறும் அந்நிறுவனத்திற்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.