புதினங்களின் சங்கமம்

அறிவித்ததோடு மட்டும் அநுரவின் கடமை முடிந்துவிட்டதா?

டித்வா புயலுக்கு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் பல்வேறு விதமான உதவித்திட்டங்களை வழங்கவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது. அது மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. இருப்பினும் அரசை பாராட்டிய அந்த மக்களே தற்போது, அரசாங்கம் வழங்குகின்ற உதவித்திட்டங்கள் எட்டாக்கனியாக காணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறுவிதமான உதவித் திட்டங்களை அரசாங்கம் அறிவித்தாலும் அது அரசாங்க அதிகாரிகள் ஊடாகவே மக்களை சென்றடைய வேண்டிய ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார்” என்ற முதுமொழிக்கு அமைவாக அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.

குறித்த அனர்த்த நிவாரண உதவித் திட்டத்திற்கு தகுதியற்றோரது புலம்பல்கள் ஒருபுறம் இருக்கட்டும், அது எமக்கு தேவையும் அல்ல. ஆனால் உதவித் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கும் அந்த உதவித்திட்டம் செல்லக்கூடாது என்ற திட்டமிட்ட நோக்குடன் அதிகாரிகள் செயற்படுவதை காணமுடிகிறது.

தமது பாதிப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம சேவகர் அல்லது உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், அவர்கள் ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி அவர்களுக்கான உதவித் திட்டங்கள் கிடைக்காமல் இருப்பதனை உறுதி செய்கின்றனர்.

கல்லூண்டாய் பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் வெள்ள நீர் சென்ற நிலையில் அந்த வீட்டில் மின்சார இணைப்புகளும் சேதமடைந்ததாக கூறப்பட்டது. குறித்த குடும்பம் பெண் தலைமைத்துவ குடும்பம் என்பதால் அந்த குடும்பத் தலைவி கொழும்பில் தங்கி நின்று வேலை செய்கின்றார். மகன் கல்வி கற்று வருகின்றார்.

அவர்கள் தமக்கான அனர்த்த நிவாரண உதவிக்காக பதிவு செய்யுமாறு கோரிய நிலையில் அந்த பகுதி கிராம சேவகர் தன்னை ஒரு இரண்டாவது ஜனாதிபதி போல் கருதி அவர்களுக்கான உதவித் திட்டங்கள் கிடைப்பதற்கு வழிசெய்யாமல் அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் அந்த மாணவன் முயற்சி எடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்கின்றார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர், உதவித்திட்டம் வழங்காமை குறித்து பிரதேச செயலரிடம் விளக்கம் கோருகின்றார். அதன்பின்னர் அந்த மாணவனின் குடும்பம் உட்பட 18 குடும்பங்கள் அனர்த்த நிவாரணத்துக்காக பிரதேச செயலரால் பரிந்துரைக்கப்படுகிறது. செய்தி தீயாய் பரவுகிறது, கிராம சேவகர் மூக்குடைபடுகின்றார்.

உங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதன் மூலமும், ஊடகங்களில் செய்திகள் வருவதன் மூலமும் தான் உங்களது சேவை சீராக்கப்படும் என்றால் மக்களும் உங்களுக்கு எதிராக முறையிட தயாராக இருக்கின்றனர். நாங்களும் செய்திகளை வெளியிட தயாராக இருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் என்று சர்வதேச நாடுகள் அள்ளிக் கொடுக்கின்றன. அதனை வாங்கிய அரசும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுங்கள் என்று அரச அதிகாரிகளிடம் கொடுக்கின்றது. ஆனால் அந்த அரச அதிகாரிகளோ தங்களது பணத்தில் இருந்து எடுத்து கொடுப்பது போல குத்திமுறிகின்றனர்.

இடர்காலங்களில் பல அதிகாரிகள் தங்களது குடும்பத்தை கூட கருத்தில் கொள்ளாது தேடித் தேடி உதவித் திட்டங்களைப் பெற்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் அவற்றை கொண்டு சென்று சேர்த்ததும் எம் நாட்டிலேயே இடம்பெற்றது.

ஒரு பேச்சுக்கு, எந்த கிராம சேவகர் அல்லது அரச அதிகாரி அரசாங்கத்தின் உதவித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு அதிகம் பாடுபடுகின்றாரோ அல்லது அதிக குடும்பங்களுக்கு உதவி செய்கின்றாரோ அவருக்கு கௌரவிப்பு, பாராட்டு, பதவி உயர்வு, பரிசில்கள் என்பன வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தால் இப்போது அடித்துப்பிடித்துக்கொண்டு மேல் அதிகாரிகளுடன் சண்டை போடுவார்கள் நாங்கள் கடமை புரிகின்ற பகுதியில் தான் அதிக பாதிப்புகள் என்று.

வெள்ள காலத்தில் ஓடி ஓடித்திரிந்து மக்களை சந்தித்த ஆளும் தரப்பு அமைச்சர்கள், எம்.பிகள், எதிர்த்தரப்பு எம்.பிகள் ஏன் இந்த விடயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அசண்டையீனமாகவும், பழிவாங்கும் நோக்குடனும் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை?

இந்த அனர்த்த நிவாரண உதவித்திட்டங்களை பெற தகுதியுடைய மக்கள் நிராகரிக்கப்படுகின்றனர் என்ற விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஆளும் தரப்பு அமைச்சர்கள், எம்.பிகள் மௌனம் சாதிப்பது ஏன்? இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையா?

அரசாங்கத்தின் கடமையானது உதவித் திட்டங்களை அறிவித்ததோடு நின்று விடக்கூடாது. அப்படி நின்றுவிட்டால் உங்களது திட்டம் முழுமையாக மக்களிடம் சென்றடையாது. இதனால் உங்கள் அரசாங்கத்துக்குத்தான் அவப்பெயர். தற்போது 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவுதான் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில், மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்ப உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன. எனவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி முற்றுப்புள்ளி வைத்தால் தான் ஏனைய உதவித் திட்டங்களிலும் இவ்வாறு அரச அதிகாரிகளின் மெத்தனப்போக்கு நீங்கும்.

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தை அரசாங்கமானது அரசாங்க அதிகாரிகளிடமிருந்து மீண்டும் ஆரம்பித்தால் நன்றாக இருக்கம்.

நன்றி

கஜி றிப்போட் முகப்பக்கம்