மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் காயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை: யாழ். பொன்னாலையில் கொடூரம்!
மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் அடிகாயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை செய்த சம்பவமொன்று யாழ்.பொன்னாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணம் முடித்துள்ளார். அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் பிள்ளைக்கே இவ்வாறு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் இணைந்து அந்த குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதனால், குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்கள் மீது மிளகாய்த் தூள் இட்டதாகவும், பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் சங்கானைப் பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர். கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகச் சிறுவர்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்குச் சென்ற நிலையில் கணவனும், மனைவியும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

