புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் முதல் நிலை பெற்ற மாணவனின் திடீர் மரணமும், மர்மங்களும். – மு.தமிழ்ச்செல்வன்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு கிராம அலுவலர் பிரிவில் கடந்த 30.09.2025 அன்று இடம்பெற்ற மரணம் ஒன்று அந்த மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. முக்கியமாக முல்லைத்தீவு மாவட்ட கல்விச் சமூகம் பெரும் சோகத்திற்குள்ளானது. இறுதிச் சடங்களில் மாணவர்களும் மாணவிகளும்,ஆசிரியர்களும் கண்ணீர் விட்டு ஆழுதார்கள்.
ஓட்டுசுட்டான் மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் (e.tech.) கல்விகற்ற பரமேஸ்வரன் வானுசன் என்ற இருபது வயது மாணவனின் மரணமே அது.பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையான அவன் இறுதியாக வெளிவந்த க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் குறித்த பிரிவில்; முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலை பெற்றிருக்கிறான்.(First Rank) அமைதியான, பண்பான, ஆசிரியர்களுக்கு கீழ்படிவான நல்ல பழக்கவழக்கங்கள் கொண்ட இந்த மாணவன் ஏனைய மாணவர்களுக்கு முன்ணுதாரணமாகவும் காணப்பட்டுள்ளான். எனவேதான் இவனது மரணம் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
வறுமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வீட்டுக்கு ஒரேயொரு பிள்ளையான வானுசன் கற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவாகியிருந்த நிலையில் இறப்பது என்பது யாரைதான் கவலை கொள்ளச் செய்யாது அதுவும் ஒரு நல்ல பண்பான மாணவன் என்றால் துயரம் பல மடங்காகும். எனவே இதுவும் கடந்து போகும் என்பது போல வானுசனின் மரணமும் சில நாட்கள் பேசப்பட்டன. பின்னர் அப்படியே எல்லா சம்பவங்கள் போன்றும் கடந்து போய்விட்டது. ஆனால் அவனது பெற்றோர் மாத்திரமே இப்பொழுதும் தங்களது ஒரேயொரு பிள்ளையை நினைத்து அழுதுக்கொண்டிருகின்றனர்.
வானுசன் கடந்த 19.07.2025 அன்று வீட்டு முற்றத்தில் நின்றுக்கொண்டிருந்த போது தலை சுற்றுகிறது எனச் சொல்லி அப்படியே முற்றத்தில் அமர்ந்தவனை அவனது தாய் உடனடியாக பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் அங்கிருந்து அவன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலைக்கு மாற்றப்பட்டுள்ளான். மாஞ்சோலையில் வானுசனை பரிசோதித்த வைத்தியர்கள் அவனது சிறுநீரகங்கள் இரண்டும் 95 வீதம் செயலிழந்த விட்டன என்ற அதிர்ச்சியான காரணத்தை கூறியுள்ளனர். ஆதாவது நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu) .
பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வானுசனின் நண்பர்கள் என எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாக அது இருந்தது ஏன்னெனில் முதல் நாள் வரை அவன் இரண்டு சிறுநீரகங்களும் 95 வீதம் செயலிழந்த ஒருவனாக இருக்கவில்லை எல்லோரும் போல் அவனும் இருந்தான். எந்த நோய் அறிகுறிகளும் தென்படவில்லை. எனவே இது எப்படி நடந்தது? என்பதுவே பெற்றோர்கள் உட்பட அனைவரினதும் சந்தேகம். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வானுசன் இறந்துவிட்டான் என எல்லோரும் அதனை கடந்து சென்றுவிட்டனர். அதற்கான காரணத்தை எவரும் கண்டறிய முற்படவில்லை, கண்டறிந்து எதிர்காலத்தில் இப்படியொரு சம்பவம் மீளவும் இடம்பெறாதிருக்க என்னசெய்ய வேண்டும் என்றும் எவரும் முயற்சி செய்யவில்லை.
இச் சம்பவத்தை நாங்கள் வெறுமனே முல்லைத்தீவு என்கிற ஒரு பின்தங்கிய மாவட்டம் ஒன்றின் கிராமத்தில் 20 வயது மாணவன் சிறுநீரகம் செயலிழப்பால் இறந்துபோனான் என்று கடந்து சென்றுவிட்டோம். ஆனால் இதற்கு பின்னால் உள்ள ஆபத்தான விடயம் ஒன்றை நாம் ஆராய தவறியிருக்கின்றோம்.
எந்த விதமான கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாத, எந்த நோய்களுக்கும் மாதாந்த சிகிச்சைகளுக்கு சென்று மாத்திரைகள் பாவிக்காத அந்த 20 வயது மாணவனுக்கு எப்படி அவனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன? ஏன்பதனை பற்றி நாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தவறியுள்ளோம்.
வானுசன் பண்டாரவன்னியன் பாடசாலையில் க.பொ.த. சாததாரன தரம் வரை கற்றவன். 6ஏ,பி,2சி பெறுபேறுகளை பெற்று உயர்தரம் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் கற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையினையும் பெற்றவன். ஒட்சுட்டான் கற்சிலைமடு பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவன். அவனது பெற்றோர்களும் அதே இடத்தைச்சேர்ந்தவர்கள். இவனது பிரதேசம் காலம் காலமாக விவசாயத்தை மேற்கொள்கின்ற பிரதேசம் குறிப்பாக அதிகளவு நெற்பயிர்ச்செய்கையினை மேற்கொள்கின்ற பிரதேசம்.முத்தையன்கட்டு குளத்தின் நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பிரதேசம். காலபோகம் சிறுபோகம் என இரண்டு போகங்கள் வயல் செய்கின்றவர்களை அதிகம் கொண்டு பிரதேசம். தந்தை விவசாயம் மற்றும் கூலித்தொழில் வறுமைக்குபட்ட குடும்பம். தந்தையின் கஸ்ரத்தை உணர்ந்து அவன் அடிக்கடி கூறும் வார்த்தை ‘அப்பா இன்னும் ஒரு நான்கு வருசம் கஸ்ரம் அதற்கு பிறகு நான் ஒரு இன்ஜினியராக வருவேன். ஏங்கட கஸ்ரம் எல்லாம் பறந்திடும’; என. ஆனால் அவனோ இந்த உலகை விட்டே பறந்துவிட்டான். அவனது அழகான புகைப்படங்களை பார்த்து தினமும் அழுதுகொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்கள், பாடசாலை என எல்லோரும் அவனை காப்பாற்றிவிட போராடியும் அவர்களால் வெற்றிப்பெற முடியவில்லை.
வன்னியின் விவசாய நடவடிக்கைகள் 2009 இற்கு முன்னர் பெருமளவு இயற்கையோடு தொடர்புடையதாக காணப்பட்டது. இராசயான உரங்களும், கிருமிநாசினிகளும் மிக மிக குறைவாக பயன்படுத்திய காலம்., விவசாய நடவடிக்கைகளில் இராசயனங்கள் பயன்படுத்தப்படாத காலம் என்றே கூற முடியும். இதன் காரணமாக உற்பத்தி பொருட்களில் நஞ்சற்ற தன்மை இருந்தது, நிலம, நீரும் மாசுப்படாது காணப்பட்டது.
ஆனால் 2009 இற்கு பின்னராக காலத்தில் விவசாய நடவடிக்கைள் தலைகீழாய் மாறியது. அதிகரித்த விளைச்சலை பெறுவதற்காகவும், நோய்தாக்கங்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கவும் என விவசாயிகள் அதிக இராசயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதன் விளைவு உற்பத்தி பொருட்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இராசயனங்கள நிறைந்ததாக மாறியதோடு, நிலமும் நீரும் என சூழலும் மாசுப்பட்டது.
வானுசனுடைய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களுடைய நெற்பயிர்களுக்கு யூரியா, டிடிஎம், பொட்டாசியம் என ஒரு ஏக்கர் வயலுக்கு சுமார் 100 கிலோ கிராம் இராசயன உரத்தை பயன்படுத்துகின்றனர். அவ்வாறே சுமார் ஒரு லீற்றர் வரை கிருமி நாசினியை பயன்படுத்துகின்றனர். சுமார் 5000 ஏக்கர் வயல்நிலங்களை கொண்ட ஒரு பிரதேசத்தில் இரண்டு போகமும் இவ்வாறு இராசயன உரத்தை பயன்படுத்தினால் வருடம் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் கிலோ கிராம் இராசயன உரமும், பத்தாயிரம் லீற்றர் கிருமிநாசினியும் பயன்படுத்தப்படும். தேவைக்கு அளவான இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்ற போது பயிர்களை அவற்றை பெற்றுக்கொள்ளும் ஆனால் தேவைக்கு அதிகமான பயன்படுத்தப்படுகின்ற இராசயனங்கள் அனைத்தும் நிலத்தை சென்றடைகிறது. இது நிலத்தையும் நீரையும் மாசுப்படுத்துகிறது.
இந்த பிரதேச மக்கள் அனைவரினதும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்குமான நீர் கிணறுகளிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இங்குள்ள கிணறுகள் அனைத்தும் வயல் நிலங்களை அண்டியதாக அல்லது விவசாய நிலங்களின் கீழ்ப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளாக காணப்படுகின்றன. எனவே 2009 இற்கு பின்னராக காலத்தில் அதிகளவு இராசயனங்களின் பயன்பாட்டால் பெரும்பாhலும்; நிலத்தடி நீர் பார உலோகங்கள் கலந்;த நீராக மாறியிருக்கிறது.
தொழிற்சாலைகளின் கழிவுகள், எண்ணெய் கசிவுகள், விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் இராசயனங்கள் மூலம் நிலத்தடி நீரில் பார உலோகங்கள் சேர்கின்றன. கட்மியம், ஆசனிக். துத்தநாகம், நைரேட் இரும்பு, தாமிரம்,ஈயம்,பாதரசம் போன்ற பார உலோகங்கள் நீரில் கலப்பதனால் அந்த நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற நீராக மாறுகிறது. இது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவும் உள்ளது. இந்த நீரை தொடர்ச்சியாக அருந்தி வருகின்றவர்களே அதிகம் சிறுநீரகங்கள் செயரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
வடக்கில் சனத்தொகை குறைந்த (122,540) மாவட்டமான முல்லைத்தீவில் அதிகரித்த சிறுநீரக நோயாளிகள் உள்ளமை ஒரு அதிர்ச்சியான தகவலே. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரக் கிளையின் 2024 ஆம் ஆண்டின் வருடாந்த தகவல் திரட்டின் படி முல்லைத்தீவில் 921 பேர் நாட்பட்ட சிறுநீரக நோயால் (CKDu) பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அதற்கான மாதாந்த கொடுப்பனவை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை என்பது கொடுப்பனவு பெறுகின்றவர்களின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டது. ஆனால் சிறுநீரக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை.
இதில் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலக பிரிவில் 242 பேரும்; அதற்கு அடுத்தப்படியாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் ஆதாவது வானுசனின் பிரதேச செயலக பிரிவில் 171 பேரும் காணப்படுகின்றனர். இது ஓட்டுச்சுட்டான் பிரதேச சனத்தொகையில் இது சுமார் 2 வீதமாகும். மேலும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 168 பேரும்,மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 152 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 109 பேரும், கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் 79 பேரும் என நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காணப்படுகிறது.
இவர்களுக்கு மாதாந்த உதவு தொகை கொடுப்பனவுக்கா முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கடந்த ஆண்டு அறுபத்தாறு இலட்சத்து பதினைந்தாயிரம் (66,015000.00) ரூபாவை வழங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கையும், நிதியின் அளவும் வருநடாந்தம் அதிகரித்துச் செல்கிறது.
பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பிரதேசத்தை சேர்ந்த மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை புள்ளி விபரங்கள் மூலம் மிகத் தெளிவாக புலப்படுகிறது. இதற்கான பிரதான காரணம் அவர்கள் குடிநீருக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீராகும். நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ள போதும் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை குடிநீரே பிரதான காரணமாக அமைந்துள்ளது என துறைசார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் பலருக்கு நோய் தாக்கத்தின் இறுதி கட்டத்திலே தெரியவருகிறது என்கின்றனர் மருத்துவர்கள் ஆதாவது சிறுநீரகங்கள் இரண்டும் தங்களால் முடிந்தளவு இயங்கிக்கொண்டிருக்கும் எனவும் இயங்க முடியாத கட்டத்திலேயே தன்னால் இனிமேல் இயங்க முடியாது என்ற அறிகுறியை வெளிப்படுத்தும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலப்பகுதிகளிலிருந்து அவ்வவ்போது அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தாலும் அதனை நாம் பொதுவாக வழமையாக வருகின்ற சாதாரன விடயங்களாக எண்ணி கவனிக்க தவறியிருப்போம் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக வானுசன் போன்ற மிகவும இளம் வயதில் சிறுநீரக பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தாலும் வைத்தியர்கள் உட்பட எவரும் அந்த கோணத்தில் சிந்தித்திருக்கமாட்டார்கள்
நாங்களும் இந்த பிரதேசத்தில்தான் வாழ்ந்து வருகின்றோம் எனக்கு 52 வயது எனது தாயாருக்கு 79 வயது நாங்களும் இந்த தண்ணீரையே அன்று தொடக்கம் இன்று வரை குடித்துவருகின்றோம் அப்படியிருக்க ஏன் எங்களது சிறுநீரகங்கள் பாதிக்கப்படவில்லை? இந்த கேள்வி பெரும்பாலும் நாட்பட்ட சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் தவிர்க்க முடியாது எழுகின்ற கேள்வியாகும்.
எங்களது பெற்றோர்கள் உட்பட முன்னோர்கள் வாழ்க்கையும், அவர்களது உணவு முறைகளும் இயற்கையோடு காணப்பட்டது. அவர்கள் வாழ்ந்த சூழல் மாசுபாடின்றியும் இருந்தது. ஆனால் இன்று அவ்வாறில்லை. காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய் (CKDu)என்பது பல்வேறு காரணங்களின் பொருட்டு ஏற்படுகிறது மாசுப்பட்ட நீர், உணவு பழக்கம், வலி நிவாரணி மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தல், பாம்பு கடிக்கு முறையான சிகிச்சை பெறாமை, விவசாய நடவடிக்கைளில் அதிகளவு இராசயனங்களின் பயன்பாடு என ஏராளமான காரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.
ஆனால் எங்களது முன்னோர்கள் இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட்ட ஒரு வாழ்க்கையினை வாழ்ந்தவர்கள், அவர்களுக்கு உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்று உணவே நஞ்சாக மாறியிருக்கிறது. எனவே அவர்களின் உடல் இயல்பு, அவர்களது காலத்தில் அவர்களது உடல் உழைப்பு, வாழ்க்கை முறை என்பன அவர்களை இதிலிருந்து பாதுகாத்திருக்கலாம்.
ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை எல்லாமே மாறிவிட்டது. இயற்கையை விட்டு விலகிய வாழ்க்கை முறை, தொடக்கம் உணவு பழக்கம், வரை ஆரோக்கியத்திற்கு எதிரான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த பிரதேசங்களின் பொருளாதார, வாழ்க்கை முறைகளை வைத்துக்கொண்டு நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணத்தை துறைசார்ந்தவர்கள் கூறுகின்றனர். அதனடிப்படையிலேயே முல்லைத்தீவு மாட்டத்தில் பெருமளவுக்கு பொருத்தமற்ற குடிநீர் பயன்பாடே இதற்கான முதன்மை காரணமாக இருக்கலாம் என்பது அவர்களது முடிவாக அமைந்துள்ளது.
எனவே வானுசன் போன்றவர்களின் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வானுசன் முதலும் இறுதியுமாக இருக்க வேண்டும். உடல் உள ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், முறையான மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் ஆரம்பம் தொடக்கம் பெற்றுக்கொள்வது அவசியம். வுடக்கில் அதிகரித்துச் செல்லும் நாட்பட்ட சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் தவறின் இதுவொரு அனர்த்தமாக மாறிவிடும்.
May be an image of one or more people and people smiling