லண்டன் மாப்பிள்ளையை கட்டலாமா? இங்கிலாந்துக்கு அகதியாக வரலாமா? இறுக்கமாகும் இங்கிலாந்து சட்டங்கள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
இங்கிலாந்து நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான சட்டங்களை இறுக்கமாக்க உள்ளது. அந்தத் திட்டம் நிறைவேறினால் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறி நிரந்தர குடியுரிமை பெறுவது சிக்கலாகும்.
இதுவரை அகதி அந்தஸ்து கோரும் நபர் அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் 5 – 10 வருடங்களுக்குள் நிரந்தர குடியுரிமை பெறலாம் என்ற நிலமை இருந்தது.
இப்போது அது இன்னும் கடினமாக்கப்பட உள்ளது.
புதிய திட்டத்தின் படி ஒரு அகதி கோரிக்கையாளர் நிரந்தர குடியுரிமை பெற 20 – 30 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்திருந்தால் 30 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
சுகாதார பராமரிப்பாளர்கள் ஆக வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை பெற 15 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
சுகாதார பராமரிப்பாளர்கள் என்று போலியான ஆவணங்களை காட்டி நிறையப் பேர் வருவதாக அந்த விசா வழங்கள் சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அரசால் நிறுத்தப்பட்டு இருந்தது.
இப்போது அந்த விசா மூலம் ஏற்கனவே வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை பெற 15 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
அதேபோல் குடும்பத்தவர்கள் குடியுரிமை பெறுவதும் கடினமாக்கப்பட உள்ளது. முன்பு அகதி அந்தஸ்து கோருபவருக்கு குடியுரிமை கிடைத்தால் , அவரது துணைக்கு இலகுவாக குடியுரிமை கிடைத்துவிடும்.
இப்போது துணைகள் , குடியுரிமை பெற முன் அவர்கள் இந்த நாட்டுக்கு என்ன பங்களிப்பு செய்கிறார்கள் , அவர்களின் ஆங்கில அறிவு எந்தளவு உள்ளது என்பதை வைத்தே குடியுரிமை வழங்கப்படும்.
இந்த மாற்றங்களால் வைத்தியர்கள் , தாதியர்கள் , மற்றும் உயர் திறமையான வேலை விசாவில் உள்ளவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வழமைபோல் 5 வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெறலாம்.
அதேநேரம் வருடத்திற்கு 125000 பவுண்ட்ஸ்களுக்கு அதிகமாக உழைப்பவர்கள், புத்தாக்க கண்டு பிடிப்பாளர்கள் , உலகளவில் சாதனை செய்யக்கூடிய திறமையானவர்கள் என்ற வகையில் வந்தவர்கள் மூன்று வருடங்களில் குடியுரிமை பெறலாம்.
இலங்கையர்கள் இங்கிலாந்துக்கு நிரந்தர குடியுரிமை பெறும் நோக்கத்தோடு செல்ல முடியுமா ?
ஆம்
ஆனால் அவர்கள் சட்ட ரீதியாக வரவேண்டும். வருடத்திற்கு 50000 பவுண்டஸ்களுக்கு அதிகமாக சம்பளம் பெறக்கூடிய வேலை உள்ளவர்கள் மட்டுமே செல்வது உகந்தது.
இங்கிலாந்து சென்று பாஸ்போர்ட்டை கிழித்து விட்டு அகதி அந்தஸ்து கோரும் நோக்கத்தோடு , அல்லது மாணவர் விசாவில் வந்து அகதி அந்தஸ்த்து கோரும் நோக்கத்தோடு அல்லது பிரான்ஸ் சென்று கப்பல் வழியாக இங்கிலாந்துக்குள் புகும் நோக்கத்தோடு இங்கிலாந்து வருவது நல்லதல்ல.
அப்படி வரும்போது உங்கள் அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ள பட்டாலும் அங்கே நிரந்தர குடியுரிமை பெற நீங்கள் ஆகக்குறைந்தது 20 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
அத்தோடு முன்பு போல் உங்கள் குடும்பத்திற்கு அந்த உரிமை இலகுவாக கிடைத்து விடாது.
இந்த திட்டம் அநேகமாக அடுத்த ஏப்ரல் அளவில் நடைமுறைக்கு வரலாம். அதுதவிர எதிர்காலத்தில் இது இன்னும் இறுக்கமாக்கப்படலாம். அதனால் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு செல்லும் ஐடியாவை விட்டுவிடுவது நல்லது.
இங்கிலாந்து மாப்பிள்ளையை மணம் முடித்து வரலாமா?
ஆம் வரலாம் .
ஆனால் அதற்கு முன் அவருக்கு இங்கிலாந்து நிரந்தர குடியுரிமை உள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும். அவருக்கு குடியுரிமை இருந்தால் , மணமுடித்து வருபவர்கள் இப்போது உள்ளது போலவே ஐந்து வருடத்தில் நிரந்தர குடியுரிமை பெறலாம்.

