செவ்வந்தியின் தலையை வெள்ளைத் துணியால் போர்த்திக் கொண்டு வராமல் விட்டது ஏன்?
கொலை செய்த அல்லது கொலைக்கு நேரடியாக உதவி செய்ததாக நம்பப்படும், குற்றவியல் குற்றம் (Criminal Offence) புரிந்த கைதிகளை பொலிஸார் அழைத்து வரும் போது, அவர்களின் தலையை வெள்ளைத் துணியால் மூடிக் கொண்டு வருவது வழமை.
ஆனால், இலங்கை குற்றப் புலனாய்வு பொலிஸார் செவ்வந்தி உள்ளிட்ட கைதிகளை, நேபாளத்தில் இருந்து ஆடம்பரமான முறையில் அழைத்து வந்திருக்கின்றனர் போல் தெரிகிறது.
செவ்வந்தி விமானத்தில் இருந்து இறங்கி வரும் முறையும், விமான நிலைய ஆசனத்தில் அமர்ந்திருந்து சிரித்துக் கொண்ட முறையும், கொலைக் குற்ற சந்தேகநபர் என்ற உணர்வை மறைத்திருக்கின்றன.
அத்துடன் அவர் தன்னுடைய பயணப் பொதியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போன்று கொண்டு வருகிறார்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் செவ்வந்தியை சுற்றி பாதுகாப்பு வழங்கிக் கொண்டு வருகின்றனர்.
சில பிரதான ஊடகங்களில் இந்த ஆடம்பரமான காட்சி வெளியாகியுள்ளது. அந்த ஊடகங்களின் சமூக வலைத்தளங்களிலும் அக் காட்சி வெளியாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கானோர் அதனை பார்த்துமுள்ளனர்.
நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது வேறு.
ஆனால் —
அவரை கொலை செய்வதற்கு நேரடியாக களம் இறங்கி ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்து கொண்டு வரும்போது, கைதிகளுக்கான நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?
இந்த நடைமுறை செவ்வந்தி கைது விவகாரத்தில் பின்பற்றப்படவில்லையே!
இங்கே குற்றவியல் பொலிஸாரும் கொழும்பில் உள்ள சில பிரதான ஊடகங்களின் சில செய்தியாளர்களும் தவறு இழைத்துள்ளனர் என்றே பொருள் கொள்ள முடியும்…
சமூக ஊடகங்கள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன என்று இலகுவாக குற்றம் சுமத்த முடியும்.
ஆனால் —
செவ்வந்தியை அழைத்து வந்த காட்சிகளை வீடியோ எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் பிரதான ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
யூடியூபர்ஸ் அங்கு செல்லவில்லை.
பிரதான ஊடகங்களில் வெளியான காட்சிகளை செம்மையாக்கம் (Editing) செய்தே சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை பிரசுரித்திருந்தன.
சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் ஆடம்பரமாகவும் நகைச்சுவையாகவும் அதனை எல்லோரும் சிரித்து ரசிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருந்தன.
இது சமூகத்தில் பிழையான கற்பிதத்தை கொடுத்துள்ளது —
அதாவது —
கொலை செய்து விட்டுத் தப்பினாலும் கைது செய்யப்படும் போது, அரச மரியாதை போன்ற உணர்வுகள் கிடைக்கும் என்ற ஒரு தவறான புரிதலை அக் காட்சிகள் சமூகத்தில் விதைக்கின்றன.
அது மாத்திரமல்ல —
கொலை என்பது மிக இலகுவான காரியம் என்ற பார்வையும், இளைஞர்கள் – பெண்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில், செவ்வந்தியின் வயது 26.
அத்தோடு —-
கொலை செய்தால் அல்லது கொலைக்கு உதவி செய்து ஓடி ஒளித்துக் கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டால், அரச மரியாதையின் தரத்துக்கு பிரதான ஊடகங்களும் தங்களை காண்பிக்கும் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் மேலோங்கியுள்ளன.
அதேநேரம், யூடியுபர்ஸ் ஊடக ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல,
அல்லது அவர்களை ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு கோரவும் முடியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில் —-
—— சில பிரதான ஊடகங்கள் செவ்வந்தி விவகாரத்தில் பொறுப்பின்றி செயற்பட்டமை கண்டனத்துக்குரியது.
பொலிஸாரிடம் தனியான ஊடகப் பிரிவு உள்ளது. அந்த ஊடகப் பிரிவினரால், செவ்வந்தியும் ஏனைய கைதிகளும் அழைத்து வரப்பட்ட காட்சிகளை பதிவு செய்து, பின்னர் பிரதான ஊடகங்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம்.
அல்லது வெள்ளைத் துணியால் முகத்தை மூடிக் கொண்டு வந்திருக்கிலாம்.
ஆனால் —
பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களம் இத் தவறுக்கு பொறுப்புக் கூறுமா?
அதேநேரம், மக்களுக்கான அரசாங்கம் என்று மார் தட்டும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதற்கு பொருத்தமான பதில் தருமா?
விளக்க குறிப்பு —
பல மாதங்களாக வியூகம் வகுத்து செவ்வந்தியை கைது செய்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமக்குள் பெருமைப்படக் கூடும்.
ஆனால் செவ்வந்தி அழைத்து வரப்பட்ட முறையானது, குற்றப் புலனாய்வு பொலிஸாரின் அப் பெருமைகளை மலினப்படுத்தியுள்ளது எனலாம்.
செவ்வந்தியின் இயற்கை அழகுக்கு ஏற்ப சமூக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் கைதுக்கான நோக்கத்தை தரம் குறைத்துள்ளது என்றே பொருள் கொள்ள முடியும்…
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

