புதினங்களின் சங்கமம்

சினிமாவை மிஞ்சிய காட்சி!! திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் குடும்பம் இடைவழியில் இறக்கப்பட்டது! நடந்தது என்ன?

அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட
தமிழ் குடும்பம் நாடு கடத்த விமானத்தில் அனுப்பப்பட்டு, கடைசி நொடி திடீர்
திருப்பமாக அவுஸ்திரேலியாவின் இன்னொரு நகரத்தில் இறக்கப்பட்டு, தங்க
வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்.

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற நடேசன்- பிரியா
தம்பதிக்கு அங்கு ஒரு மகள் பிறந்தார். அவர்களின் புகலிட கோரிக்கை
நிராகரிக்கப்பட்டு, மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில், நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில்
தடுக்கப்பட்டு டார்வினில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ
அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும் அரசிடம்
விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து அந்த குடும்பம்
பலரது எதிர்ப்பையும் மீறி நேற்று விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தது. விமானம்
டார்வினைச் சென்றடைந்த போது இக்குடும்பம் விமானத்திலிருந்து
வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் நாடுகடத்தலுக்கு எதிராக தாக்கல்
செய்யப்பட்ட மேன்முறையீடு ஒன்றின் அடிப்படையில் இறுதிதேரத்தில் நீதிமன்றம்
விதித்த இடைக்காலத்தடையை அடுத்து நாடு கடத்தல் நடவடிக்கையில் இந்த திடீர்
காட்சி மாற்றம் நிகழ்ந்தது.

எனினும் இவ்விடைக்காலத்தடை இன்று மதியம் காலாவதியாகவுள்ள அதேநேரம்
இம்மேன்முறையீடு மீதான நீதிமன்ற அமர்வு அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை
இடம்பெறும். இதில் அந்த குடும்பத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும் எனவும்
கூறப்படுகிறது.

நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம்
ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு
தருணிக்கா உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகள்
இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாவும்
கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு
வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த
குயின்ஸ்லாந்து பகுதியிலிருந்து பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த
முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில்
தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில்
தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென
வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று
மெல்பேர்ன் பெடரல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான
நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு
வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக
நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் 
நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி
விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை
நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இறுதி முயற்சியாக குழந்தை தருணிக்கா தன்னை அவுஸ்திரேலியாவில் வாழ
அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த
அதிகாரிகள், அந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்பி வைக்க மறுத்து
விட்டனர்.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela
பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ
அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததுடன் பேரணி,
கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்ட போதும்,
இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் தொடர்ந்தும்
மறுத்து வந்தநிலையில் இந்நாடுகடத்தல் முயற்சி மற்றுமொரு தடவை
தடுக்கப்பட்டுள்ளது.