யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டை குழந்தைகளும் தாய் சாருமதியும் மருத்துவக் கொலையா? சத்தியமூர்த்தி அமசடக்காக இருப்பது ஏன்?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயாரும் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 28) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் பிரசவித்தார். இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாயார் தொடர்ச்சியாக மயக்கத்தில் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (26) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவத் தவறுகளே மரணத்துக்கு காரணம் என சமூகவலைத் தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி குறித்த சம்பவம் தொடர்பில் கள்ள மௌனம் சாதித்து வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

