புதினங்களின் சங்கமம்

மனைவியை வைத்து இரு சிங்களவர்களை சுட்டுத் தள்ளிய மர்மநபர்கள்!! நடந்தது என்ன?

ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் நேற்று முன்தினம் (25) இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பில் மூன்று விசாரணைக்குழுக்களை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்
பொலிசார். சுட்டுக்கொல்லப்பட்டவர் தொழிலதிபர் ஆவார். அவரது சாரதியும் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த பல பரபரப்பு தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

43 வயதான விஜித பிரேம்லால் அல்லது சுமேத என அழைக்கப்படும் தொழிலதிபரே
கொல்லப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வணிக
வளாகத்திற்கு தற்போது மணல் விநியோகித்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக இந்த
சம்பவம் இடம்பெற்றதா என்றும், தனிப்பட்ட குடும்ப விவகாரங்களால் இந்த கொலை இடம்பெற்றதா
என்றும் பொலிசார் விசாரணைகளை நடத்துகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் முகத்தை மறைத்த ஹெல்மெட் அணிந்தவர்கள் இருவர் அந்த
வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஒருவர் ரி 56 ரக துப்பாக்கியும், மற்றவர் 9 மி.மீ
துப்பாக்கியும் வைத்திருந்தனர்.

அந்த நேரம் வீட்டில் சுமேதவின் மனைவி, தாய், சகோதரர் அங்கிருந்தனர். அங்கு நுழைந்த மர்ம
நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, சுமேதவை பற்றி விசாரித்துள்ளனர். சுமேத வீட்டில்
இருக்கவில்லை. அவர் வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டதாக, மனைவி தெரிவித்தார்.

அப்போது, அந்த நபர்கள் கைத்தொலைபேசியில் வீடியோ அழைப்பை மேற்கொண்டு, வீட்டிலிருந்த மற்றைய
நபரை காண்பித்து மறுமுனையிலிருந்தவரிடம், இவர்தானா சுமேத என வினவினார்.
மறுமுனையிலிருந்தவர் இல்லை என பதிலளித்துள்ளார்.

இதையடுத்து சுமேதவின் மனைவியை சுட்டுவிடுவதாக மிரட்டி, சுமேதவிற்கு தொலைபேசி
அழைப்பேற்படுத்தி, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, உடனடியாக வீட்டுக்கு வரும்படி
கூறும்படி கட்டளையிட்டார். இதையடுத்து, தனது கணவரை தொலைபேசியில் அழைத்த மனைவி,
குழந்தைக்கு உடம்பு சரியில்லை, உடனே வீட்டுக்கு வாருங்கள் என்றார்.

சுமார் 10 நிமிடங்களில் சுமேதவும், அவரது சாரதியும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு
வந்தனர். ஆயுததாரிகளில் ஒருவர் கைத்துப்பாக்கியை காண்பித்து வீட்டிலிருந்தவர்களை மிரட்டி
வைத்திருக்க, மற்றையவர் ரி56 ரக துப்பாக்கியால் சுமேத மற்றும் சாரதி மீது துப்பாக்கி
பிரயோகம் செய்தனர்.

இதையடுத்து இருவரும் அங்கிருந்த தப்பிச் சென்று விட்டனர்.

இந்த இரட்டைக் கொலை தொழில் தகராறால் ஏற்பட்டதா அல்லது குடும்ப விவகாரங்களால் ஏற்பட்டதா
என்பதை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

சுமேத மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டு உள்ளது. 2004ல் தனது முதல் மனைவியின் கள்ளக்காதலனை
கொலை செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.