தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளி சடலமாக மீட்பு!
தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலை மலையிலிருந்து சனிக்கிழமை (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தேயிலை மலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருகையில்,
குறித்த நபர் காலையில் தேயிலை செடிகளுக்கு உரம் இட சென்று பின்னர் மாலை மேலதிகமாக கொழுந்து பறிக்க சென்றுள்ளார்.
தேயிலை கொழுந்து நிறுக்கும் இடத்திற்கு குறித்த நபர் மிக நேரம் வருகை தராததால் அவருடன் சென்ற ஏனைய தொழிலாளர்கள் அவர் கொழுந்து பறித்த இடத்தை நோக்கி சென்றபோது அவர் சடலமாக கிடப்பதை கண்டு ஏனையோருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் ஞாயிற்றுக்கிழமை (07) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
