புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் ரயில் மோதி 26 வயது குடும்பஸ்தர் பலி!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை களுவன்கேணி வீதி ரயில்வே கடவையில் இன்று (02) புகையிரதத்தில் மோதுண்டு இடம்பெற்ற கோர விபத்தில் களுவன்கேணி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொது மக்களால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணம் செய்த குறித்த நபர் புகையிரதம் வரும் வேளையில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த புகையிரத கடவையில் இரண்டு நாட்களாக பணியாளர் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், புகையிரத கடவை ஊழியர் இல்லாததால் மக்கள் பாதுகாப்பற்ற முறையில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் புகையிரத திணைக்களத்தின் அலட்சியப் போக்கே இந்த விபத்துக்கு காரணம் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த இழப்பு மிகவும் வேதனையானது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.