வடமராட்சி ஹாட்லிக் கல்லுாரி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தேசிய ரீதியில் கல்விப் பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தும் ஒரு கல்லுாரியாகும். குறித்த கல்லுாரிக்கு, தரம் 5 ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் அக் கல்லுாரிக்கான வெட்டுப்புள்ளிகளை பெற்ற மாணவர்களே அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். குறித்த நடைமுறை பல காலங்களாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் குறித்த கல்லுாரியில் தரம் 6ல் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு மேலதிகமாக, ஏனைய தரங்களில் கற்கும் மாணவர்களில் சிலர் பல்வேறு காரணங்களால் இடை விலகிச் செல்லும் போது அங்கு காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்களைச் சேர்ப்பது குறித்த பாடசாலையின் நடைமுறையில் பெரும்பாலும் காணப்படவில்லை. ஆனால் தற்போது அவ்வாறான வெற்றிடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த நடவடிக்கை வெளிப்படையாக நடக்காது தமது பாடசாலை இணையத்தளத்தில் மாத்திரம் பிரசுரித்துவிட்டு நடந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் காரணமாக அப் பாடசாலையின் தரம் 6 தவிர்ந்த ஏனைய தரங்களுக்கு சேர்வதற்கு ஆர்வமாக இருந்த பல மாணவர்கள் விண்ணப்பங்களை கொடுக்கவில்லை எனவும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் பாடசாலையில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக வெளியாகிய சுற்றுநிரூபங்களில் உள்ள நடைமுறைகளைக் கொண்டு ஹாட்லிக் கல்லுாரியில் குறித்த தரங்களில் காணப்படும் மாணவ வெற்றிடங்களு்ககு ஏற்ப மாணவர்களை சேர்ப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என வடக்கு கல்வி அமைச்சு மற்றும் வடக்கு ஆளுநருக்கு முறைப்பாடுகள் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த முறைகேடுகுளுக்கு வடமராட்சி கல்வி வலயமும் துணை நிற்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஹாட்டில் கல்லுாரியின் உப அதிபர் ஒருவரின் மகன் 2024ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறியதால் குறித்த கல்லுாரியில் தனது மகன் 6ம் தரத்தின் பின்னர் அடுத்து வரும் ஏதாவது ஒரு தரத்தில் கல்வி கற்பதற்காக சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு அமைவாக மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
இதே வேளை 2026ம் ஆண்டுக்கான மாணவர் அனுமதிக்காக ஹாட்லிக் கல்லுாரி அதிபர் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளின் படி மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியை வடக்கு ஆளுநரிடம் கோரியுள்ளார். யாழில் முக்கிய பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் ஹாட்லிக்கல்லுாரியின் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக இன்று வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
ஆளுநருக்கு ஹாட்லிக் கல்லுாரி அதிபர் அனுப்பிய கடிதம்







