கைக்குழந்தை கூட பயங்கரவாதியா?; இன்று மீட்கப்பட்ட சிசுவின் என்புத் தொகுதி..!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் என்புத் தொகுதி இன்றைய தினம் (06) புதன்கிழமை யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் (06) புதன்கிழமை, புதிதாக 06 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணியில் பகுதிகளில் இருந்து இன்றைய தினம் (06) புதன்கிழமை, புதிதாக 06 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று நேற்றைய தினம் (05) செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை செருப்பு, தாயம், காசு, உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் புதைகுழுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில், 68 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 32 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 17 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 68 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

