புதினங்களின் சங்கமம்

ஐஸ் போதைப் பொருள் விற்பனை கில்லாடி மன்னார் ஆஸ்பத்திரி அம்புலன்ஸ் றைவர் பொலிஸ்காரனின் கையை கடித்து ஓடிய பின் இந்தியாவில் மாட்டியது எப்படி?

ஐஸ் போதைப்பொருளை நோயாளர் காவு வண்டியில் கடத்தி விற்பனை செய்தபோது, மன்னார் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட சமயத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கட்டை விரலை கடித்து விட்டு தப்பிய நோயாளர் காவு வண்டி சாரதி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.இன்று (7) காலை பாம்பன் குந்துகால் கடற்கரை அருகில் வைத்து மரைன் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே நேற்று இரவு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய படகில் வந்து இறங்கிய இலங்கை நபரைர் தொர்பில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகத்தின் பெயரில் மண்டபம் மரைன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மரைன் போலிஸார் இலங்கை நபரை பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியை சேர்ந்த தேவராஜன் (43) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் தனுஷ்கோடி வழியாக அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்து பின்னர் 1996 ஆம் ஆண்டு கப்பல்கள் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.

தேவராஜன் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி சாரதியாக பணி புரிந்து வரும் நிலையில், சில நாட்களின் முன்னர் மற்றொரு வைத்தியசாலை ஊழியரான இரத்தினம் என்பவருடன் சேர்ந்து சுமார் 176 கிராம் ஐஸ் போதை பொருளை நோயாளர் காவு வண்டியில் கடத்தி வந்துள்ளார்.வைத்தியசாலைக்கு வெளியில் வைத்து அதனை விற்பனை செய்த போது இருவரையும் முருங்கன் பொலிஸார் கைதுசெய்து விசாரணை செய்த போது தேவராஜன் விசாரணை செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் விரலை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.தேவராஜனை பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளார். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் இறங்கியுள்ளார்.

பின்னர் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சந்தியா டைமன் என்பவர் நாட்டுப்படகில் தேவராஜனை அழைத்து வந்து பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே இறக்கி விட்டு சென்றதாக தேவராஜன் கூறியதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தேவராஜனுக்கு ஐஸ் போதை பொருள் தமிழகத்தில் இருந்து கடத்திய நபர்கள் உதவியுடன் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.தேவராஜன் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்த மரைன் பொலிஸார் விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.