Home புதினங்களின் சங்கமம் ஹரக்கட்டா உட்பட ஐவருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகள் கொண்ட குற்றப்பத்திரிகை!

ஹரக்கட்டா உட்பட ஐவருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகள் கொண்ட குற்றப்பத்திரிகை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்து தப்பிக்கச் சதி செய்தல் உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளின் கீழ், நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் “ஹரக் கட்டா” உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்ட மா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (05) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப் பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் கான்ஸ்டபிள் ரவிந்து சந்திப குணசேகர, தினேஷ் தரங்க, ருவான் சாமர எனப்படும் மிதிகம ருவான் மற்றும் சஞ்சீவ அபேசிங்க ஆகியோர் ஆவர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடர்புடைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும், குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகளின் கைரேகைகளை எடுத்து அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான பின்னர் ஹரக் கட்டா என்ற பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்குமாறும், மற்ற நான்கு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கை செப்டம்பர் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.