தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக,,1996ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கையையே ஏன் உலகில் வாழும் தமிழர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவத்தின் பின்னரே யாழ்ப்பாண பிரதேசத்தின் முக்கிய நுழைவாயிலாக இருந்த வெளிகொண்ட கடல்நீரேந்துபகுதிகளை, வயல்களை, 2 சுடலைகளை உள்ளடக்கிய செம்மணிப் பிரதேசம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியவந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குப் பின்னர் செம்மணிப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடந்த பலரும் அறியாத அதிர்ச்சித் தகவல்களை எமது ஊடகப் புலனாய்வுச் செயற்பாட்டாளர்களின் தரவுகளுடன் தொடர்ச்சியாக நாம் தரவுள்ளோம். அதன் ஒரு பகுதியாக கிருசாந்தியும் அவளது தாய், தம்பி, அயலவன் கொடூரமாகக் கொல்லப்படுவதற்கு முன் நடந்த சம்பவங்களிலிருந்து நாம் இந்தத் தொடரை ஆரம்பிக்கின்றோம். அதே நேரம் கிருசாந்தி கொல்லப்படுவதற்கு முன் சில மாதங்களாக செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பலவற்றையும் நாம் தொடர்ச்சியாக வெளியிடவுள்ளோம்.
கிருசாந்தி குமாரசுவாமி காணாமல் போனது எப்போது? படுகொலை செய்யப்பட்டது எப்போது?
1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி சனிக்கிழைமை. அரியாலை கண்டி வீதியில் தபால்பெட்டி சந்திக்கு சற்று தொலைவில் இராணுவ ரக் வண்டி மோதி சுண்டுக்குளி மாணவி ஞானந்தி கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். 19 வயதான ஞானந்தி ஏ.எல் பாடத்தில் உயிரியல் படிக்கும் மாணவி. அன்று ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் இரசாயன பாடத்திற்கான பரீட்சை எழுதுவதற்காக பாடசாலைக்கு செல்வதற்கு வீட்டு வாசலில் இருந்து சைக்கிளில் சென்று சிறிது துாரத்திலேயே மாணவி இராணுவ ரக் வண்டி நசுங்கிப் பலியானாள். இராணுவ ரக் வண்டியிலேயே முழுமையான தவறு இருந்தது அங்கு நின்றவர்களால் அறியப்பட்டது. ஞானந்தியின் தந்தை கணநாதன் அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவர். மின்சாரசபை உயர் அதிகாரியாகவும் யாழ்ப்பாணப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் உதைபந்தாட்ட லீக் தலைவராகவும் இருந்தவர். ஞானந்தியை நசுக்கிக் கொன்ற இராணுவ ரக் வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணம் செய்த இராணுவத்தினர் உடனடியாக அங்கு வந்த இராணுவத்தால் அப்புறப்படுத்தபட்டு இராணுவ ரக் வண்டிக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஞானந்தியின் தந்தைக்கு அப்பகுதியில் இருந்த மக்கள் ஆதரவு காரணமாக அங்கு கூடியவர்கள் இராணுவத்திறகு எதிராக கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். உடனடியாக அங்கு நின்ற பலரை இராணுவம் கைது செய்யத் தொடங்கவே அங்கு நின்ற பொதுமக்கள் அகன்றுவிட்டார்கள்.
அந்தக் காலப்பகுதி பத்திரிகை செய்தித் தணிக்கைக்கு உட்பட்ட காலப்பகுதி. இராணுவமோ அல்லது அரசாங்கமோ எந்தத்தவறு விட்டாலும் செய்தித் தணிக்கை காரணமாக செய்திகள் தணிக்கை செய்யப்பட்டே ஊடகங்களில் வெளிவருவது வழமை. அக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஒரே ஒரு ஊடகமான உதயன் பத்திரிகையும் ஞானந்தியின் இறப்பு தொடர்பாக ஞானந்தி கனரக வாகனம் மோதிப் பலி என்று மட்டுமே செய்தியை தணிக்கை செய்தே வெளியிட்டிருந்தது. இருப்பினும் குறித்த செய்தியில் இராணுவ வாகனம் அடித்துக் கொன்றதை மறைத்து எழுத வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் இந்தச் செய்தியில் யுத்தம் சம்மந்தமான தகவல்கள் இல்லை என்பதுடன் இது பொதுவான ஒரு விபத்து என்பதால் இராணுவ வாகனம் மோதியதாகவே உதயன் செய்தியைப் பிரசுரித்திருக்கலாம். ஆனால் பிரசுரிக்கவில்லை. இது தொடர்பாக உதயனில் செய்தி வெளியாகிய அடுத்தநாள் உதயன் உயர் பீடத்துடன் அரியாலையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர், அந் நேரம் நாவலர் வீதியில் கைலாய பிள்ளையார் கோவிலுக்கு அருகில் செயற்பட்ட உதயன் பத்திரிகை அலுவலகத்தின் உயர் பீடத்தை அனுகி கேட்ட போது அவரை அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றியுள்ளார்கள் உதயன் பத்திரிகை நிர்வாகத்தினர். அதே நாள் நல்லுார் கோவில் பெரும் திருவிழாவின் தங்கரத திருவிழா அன்று நல்லுாருக்கு வந்து தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில இளைஞர்களுடன் இது தொடர்பாக கலந்து பேசிவிட்டு வீடு திரும்பிய அவரை மாம்பழம் சந்திக்கு அருகாமையில் செயற்பட்ட இராணுவ புலனாய்வாளர்களின் சிவில் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் தமது முகாமுக்கு அழைத்துச் சென்று கடுமையான விசாரணைகளை மேற்கொண்டு இரவு 10 மணியளவிலேயே அவர் விடுவிக்கப்பட்டுமுள்ளார். அதே நேரம் அவர் அங்கு வைத்து இராணுவத்தால் தாக்கப்பட்டுமுள்ளார். உதயன் பத்திரிகைக்கு சென்று முரன்பட்ட பின் இராணுவம் அவரை விசாரணை செய்து தாக்கி விடுவித்தமை அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஞானந்தியின் நெருங்கிய நண்பியே கிருசாந்தி. கிருசாந்தியும் உயிரில் மாணவி. ஞானந்தியுடன் அதே வகுப்பில் கற்றவர். ஞானந்தி கண்டி வீதியில் பலியான காட்சியை கிருசாந்தி பார்த்து கடும் அதிர்ச்சியுற்ற நிலையிலேயே பாடசாலைக்கு இரசாயனவியல் பாடப் பரீட்சை எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கும் அழுதவண்ணம் இருந்துள்ளார். ஏனைய நண்பிகள் அவரை சமாதானப்படுத்தியுள்ளார்கள். பரீட்சை நடைபெற்று முடிந்த பின் கிருசாந்தி தனது வகுப்பு நண்பிகள் மற்றும் ஏனைய வகுப்புத் தோழிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு நண்பியின் இறுதிச் சடங்கிற்கு செல்வதற்கும் செப்டம் 09ம் திகதி பாடசாலையின் முன் நண்பியின் சாவுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு ஒன்றை நடாத்துவதற்கும் திட்டமிட்ட பின் கைதடியில் உள்ள தனது வீட்டுக்கு செம்மணிப்பகுதியினுாடா செல்ல ஆயத்தமானார்.
தொடரும்.





