இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்..
வைத்தியர் செய்த மோசமான செயல்.
————————————————————– அவசர பயண நிமித்தம் இரவு தபால் இரயிலில் கொழும்பு பயணித்து கொண்டிருந்தேன். இரவு 10.30 மணியிருக்கும் மாங்குளம் கடந்து சென்று கொண்டிருந்த போது நான் இருந்த ரயில் பெட்டிக்குள் சிறிது சலசலப்பு. சகோதர இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் இருக்கையை விட்டு எழுந்து நின்று வயிற்றைப்பிடித்துக் கொண்டு அந்தரமாக அங்கும் இங்குமாக திரிந்தார். அவருடன் வந்த ஏனைய ஏழு எட்டு பேரும், அவருடன் எழுந்த நின்று யார் யாருக்கோ அழைப்பை ஏற்படுத்தி பதறிக்கொண்டிருந்தனர். ஒருவர் எனக்கு அருகே நின்ற டிக்கெட் பரிசோதகரிடம் ஏதேனும் அம்புலன்ஸ் ஒழுங்கு படுத்தி தரமுடியுமா? என்று கேட்டார். அவரும் இல்லை இடையே வைத்தியசாலைகள் இல்லை. வவுனியாவில் நீங்கள் இறங்கி வைத்தியசாலைக்கு செல்லுங்கள் என்று சொன்னார்.
‘ கொஞ்சம் பொறுங்கள் நான் ஒரு வைத்தியர் தான் என்ன பிரச்சினை சொல்லுங்கள் ‘ என்றேன்.
‘மூத்திரா யன்ன ந டொக்டர்’
அந்தப் பெரியவருக்கு சிறுநீர் வெளியே போகாமல் அடைத்து விட்டது. அதனால் வயிற்று வீக்கத்துடன் வலியில் அவதிப்பட்டார்.
அவரை ஆறுதல்படுத்தி விசாரித்ததில் அவருக்கு அந்த பிரச்சினை ஏற்கனவே இருப்பதாகவும் இரண்டு மூன்று முறை இப்படி நிகழ்ந்ததாகவும் அதற்கு மருந்து எடுத்துக் கொள்வதாகவும் அறிந்தேன்.
அவரை வவுனியாவில் இறங்க முதல் அம்புலஸை வரவழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பலாம் என நினைத்தேன். ஆனால் அவருடன் வந்த அத்தனை பேரும் வவுனியாவில் இறங்க ஆயத்தமானார்கள்.
உண்மையில் முதன்முறையாக சிறுநீர் வராமல் அடைத்து விட்டால் அதைக் கவனமாக கையாள வேண்டும். ஆனால் அப்பிரச்சினைக்காக கிளினிக் சென்று வரும் ஒருவருக்கு ஒரு சலக்குழாய்(Urinary catheter) போட்டு சிறுநீரை வெளிவரச் செய்தாலே போதும். வீக்கமும் வலியும் குறைந்து விடும். அதனை அடுத்து வரும் இரயில் நிலையத்தில் வைத்து செய்தாலே போதும். அவர் பயணத்தை கைவிட வேண்டியதில்லை. அவர் இறங்கி வைத்தியசாலைக்கு போக வேண்டியதில்லை அவருடன் வந்தவர்களும் பயணத்தை இடையில் நிற்க வேண்டியதில்லை.
புகையிரதம் ஒரு மேலதிகமாக 3 நிமிடங்கள் வவுனியாவில் நின்றாலே போதும். ஆனால் அதில் இரு சவால்கள் இருந்தன.
1) வவுனியாவில் மேலதிக நேரத்தில் புகையிரதம் நிற்குமா?
2) நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் தேவையான Catheter மற்றும் ஏனைய மருத்துவ பொருட்களை எங்கு பெற்று கொள்வது.?
இரயில் வவுனியாவை நெருங்கி கொண்டிருந்தது…….
தம்பி Kaneshabalenthiran Kalaiventhan Kv ற்கு அழைப்பை எடுத்து இரயிலை மேலதிக நேரம் நிறுத்த ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றதா எனக்கேட்டேன்.
கடினம் ஆனால் மருத்துவ தேவை எனில் சிறிது மேலதிக நேரம் தரிக்க முடியும். ஆனால் இறுதி முடிவை ஸ்டேசன் மாஸ்டர் மற்றும் அந்த இரயிலின் Guard முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இரயில் வவுனியாவை நெருங்கி கொண்டிருந்தது……
அடுத்து வவுனியாவில் இருக்க கூடிய வைத்தியசாலை மற்றும் கிளினிக் இலக்கத்தை Google ல் தேடி அழைத்தேன். பெரும்பாலும் No answer. ஒரு வைத்தியசாலை தங்கள் வைத்தியசாலையில் அனுமதித்தால் தான் Catheter போடமுடியும். Mobile service தங்களிடம் இல்லை என்றனர்.
இறுதியில் ஓமந்தையை அண்மித்த நேரம் #Vavuniyahealthcare கிளினிக் தொடர்பு கிடைத்தது. கடமையில் இருந்த வைத்தியர் Dr. நவீன் ‘ அண்ணா mobile service doctor மற்றும் vehicle driver இல்லை, அவசரம் என்கிறீர்கள் நான் காரில் வருகிறேன் நீங்கள் மிச்ச விடயத்தை பாருங்கோ’ என உறுதியளித்ததும், டிக்கெட் பரிசோதகரை அழைத்து கொண்டு guard இயந்திரத்தின் அருகே இருக்கும் Guard room நோக்கி விரைந்தோம்.
அவரை அணுகவும் வவுனியா நிலையம் வந்தது. ஏற்கனவே அங்கு Dr. நவீன் மருத்துவ குழு மற்றும் உபகரணங்கள் உடன் நின்றிருந்தார். Guard அவர்களிடம் விடயத்தை விபரித்ததும் மேலதிக எவ்வளவு நேரம் தேவை என்றார். 3-5 நிமிடங்கள் என்றேன். அவர் விரைந்து நடவடிக்கை எடுத்தார் கடமை நிலைய அதிபர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க அவரை இறக்கி Catheter போடவும் தடைப்பட்ட சிறுநீர் வெளியே வந்ததும் அவர் கண்ணீர் மல்க கைகூப்பினார்.
ஒரு திரைப்படம் போல நடந்து முடிந்தது. நான் கேட்டிருந்த நேரத்தை விட விரைவாக அத்தனையும் முடிந்தது. அந்தக் குழுவினர் அத்தனை பேரும் நன்றி கூறினர். அது எனக்கானதல்ல. அந்த முயற்சிக்கு ஒத்துழைத்த அத்தனை பேரும்.
கலைவேந்தன், Dr. நவீன் மற்றும் குழு, வவுனியா ஹெல்த் கெயார் வைத்தியசாலை, பெயர் தெரியாத அந்த Guard, Station Master, டிக்கெட் பரிசோதகர் என அத்தனை பேரும். ஒரு நல்ல செயலுக்காக முன்வந்து நின்ற அத்தனை பேரும் வணக்கத்திற்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
மகிழ்ச்சியாக வலிகள் அற்று இருந்த பெரியவரிடம் பேசியபோது அவர்கள் சிங்கள மொழி கற்கை நெறி நடாத்தும் விரிவுரையாளர் மற்றும் ஆசிரிய குழுவினர் அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கற்கை நெறி பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு வந்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்கள்.
அவரது உறவுகள் என பலர் தொலைபேசியூடாக நன்றிகள் தெரிவித்தனர். ஆசனத்திற்கு வந்துவிட்டேன். அப்பெரியவரின் உதவியாளர் வந்து சேர் உங்களுடன் ஒருவர் பேச வேண்டுமாம் என்றார்.
அழைப்பில் இருந்தவர் நான் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பேசுகிறேன். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இறைவன் உங்களை ஆசிர்வாதிக்கட்டும். நான் மனிதாபிமானமுள்ள எத்தனையோ வைத்தியர்களை பார்த்து இருக்கிறேன். பயணத்தின் நடுவே தூக்கத்தின் நடுவே தெரியாத ஒருவருக்காக இத்தனை சிரத்தை ரிஸ்க் எடுக்கும் ஒருவரை இப்போது தான் பார்க்கிறேன். என்றார்
பயணத்தில் இருந்தாலும் தூக்கத்தில் இருந்தாலும் ஒரு வைத்தியர் எப்போதும் வைத்தியரே என்றேன். சிரித்து விட்டு நன்றாக வாழுங்கள் மகனே என்றார்.
தங்கள் கடமைக்கு மேலதிகமாக நல்ல செயல் செய்ய முன்வருபவர்கள் அத்தனை துறைகளிலும் இருக்கிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் ஒருவர் செய்யும் தவறுக்காக பொதுமைப்படுத்தி அத்தனை பேரையும் எதிர்மறையாக பழி சொல்லியே வருகிறோம். நல்லவேளை யாராவது ஒரு உன் குழாய் தம்பி அந்த பெட்டியில் இருந்திருந்தால் “ஓடும் இரயிலில் நடு இரவில் வைத்தியர் செய்த மோசமான செயல்” என்று தான் இதற்கும் #Thumbnail வந்திருக்கும்.





