அதிஸ்ட லாப சீ்ட்டின் மூலம் 28 கோடி ரூபா அதிஸ்டம்!! நடந்தது என்ன?
வேலை இல்லாமல் துபாயில் இருந்து ஐதராபாத் திரும்பிய விவசாயிக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.28 கோடி பரிசு விழுந்து ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விலாஸ் ரிக்கலா (vilas Rikkala). மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர், விவசாயி. தற்போது ஐதராபாத்தில் இருக்கிறார். இவர், சமீபத்தில் துபாய் சென்றிருந்தார்
வேலை தேடி. வேலை கிடைக்காததால், வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். அதற்கு முன், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை வாங்க வேண்டும் என்று ஆசை. ஆனால் பணமில்லை. உடனே மனைவிக்கு தகவல் சொல்லி, அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் வாங்கி, நண்பர் ரவியோடு சேர்ந்து சீட்டை வாங்கினார். பிறகு வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் விழுந்திருப்பதாக நேற்று மாலை அவருக்கு தகவல் வந்தது. இன்ப அதிர்ச்சி அடைந்த அவரால் இதை நம்பவே முடியவில்லை. இதன் இந்திய மதிப்பு, சுமார் 28 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து ஐநூறு ரூபாய்!
இதுபற்றி ரிக்கலா கூறும்போது, ‘’நான் ஏற்கனவே துபாயில் டிரைவராக வேலை பார்த்திருக்கிறேன். அப்போது அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவேன். இப்போது என்னிடம் பணமில்லாததால், மனைவி பத்மாவிடம் பணம் கேட்டேன். அதைஅபுதாபியில் வேலை பார்க்கும் நண்பன் ரவியிடம் கொடுத்து, லாட்டரி டிக்கெட் வாங்கச் சொன்னேன். அதற்கு பரிசு விழுந்திருக்கிறது. இதற்கு முழு காரணம் என் மனைவி பத்மாதான்’’ என குறிப்பிட்டார்.

