யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
அநுராதபுரம் – கல்வல பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவைக் கைது செய்வது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீதி விதிகளை மீறி மகிழுந்தை செலுத்தியமைக்காக காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் மகிழுந்தை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் காவல்துறையினர் இன்று முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள காவல்துறை ஊடகப் பிரிவு, மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவை ஆகியவற்றை மீறி செயற்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளது.

