சுற்றாடல் அதிகார சபையின் யாழ்ப்பாண அலுவலக முன்னாள் பணிப்பாளர் சுபோதரன் சுன்னாகத்தைச் சுடுகாடாக்க முயற்சித்தாரா?
பருத்திக்கலட்டி அலுமியத் தொழிற்சாலையை அகற்றுக – மக்கள் கோரிக்கை
வலிகாமத்தின் பிரதான வெள்ளவாய்க்கால் ஆறு ஓடும் பாதை, சூழ குளங்கள் உள்ள சுன்னாகம் பருத்திக்கலட்டியில் அலுமினியத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது !
வழுக்கி ஆற்றின் கிளைகளின் ஓரமாகவும் குளங்களைச் சூழவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன !
வழுக்கியாற்றின் கிளைகளும் வெள்ள வாய்க்கால்களின் நீரோட்டமும் திறந்த வயல் வெளியின் ஊடான பாரிய நீரோட்டமும் குளங்களும் குட்டைகளும் சூழ்ந்த, மாரியில் நெல்லும் கோடையில் மரக்கறி மற்றும் பழவகைகளும் வருடம் முழுவதும் விலங்கு வேளாண்மை உற்பத்திகளும் செய்யும் விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்புக்களும் பாடசாலைகளும் கோவில்களும் சூழ்ந்த சுன்னாகம் பருத்திக்கலட்டி எனும் கிராமத்தில் சுன்னாகம் வர்த்தகர் நடராஜா ஜெயசீலன் 20 பரப்பு விவசாய நிலத்தை வாங்கி அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற் சாலையொன்றைக் கட்டி முடித்துள்ளார்.
இதன் கழிவகற்றும் தொகுதியை நிலத்தினடியில் வெள்ளம் சூழும் வெள்ள நீரோட்டத்துக்குள் அமைக்கவே அவ்வர்த்தகர் முற்பட்டுள்ளார்.வெள்ள நீரோட்டமும்
நீர்ப்பிடிப்புப் பிரதேசமாகவும் உள்ள பருத்தி க் கல ட் டி யில் தொழிற்சாலைக்கான கழிவகற்றும் தொகுதியை அமைக்கமுடியாது என்று தெரிந்து கொண்டும் சூழல் அதிகாரசபையின் முன்னாள் யாழ். அதிகாரி சுபோதரன் அலுமினியத் தொழிற்சாலைக்கான கட்டிடம் அமைப்பதற்கான சிபாரிசை என்ன பின்னணியில் வழங்கினார் ?
அவர் சிபாரிசு வழங்கியிருந்தாலும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் செயலாளர் எப்படி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கினார் ?
இவற்றின் பின்னணிகள் முறைப்படி விசாரணைகள் மூலம் அறியப்பட்டு இவர்களின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டிடம் அமைக்க சிபாரிசும் அனுமதியும் வழங்கிய அதிகாரிகளிடமிருந்து தொழிற்சாலை அமைத்த வர்த்தகருக்கு நஸ்ட ஈடு வாங்கிக் கொடுக்கப்பட்டு தொழிற்சாலைக் கட்டிடம் முற்றாக அகற்றப்பட்டு மீண்டும் அக்காணி விவசாயத்துக்கே
பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வளவு பெருந்தொகை பணம் செலவழிக்கப்பட்டிருந்தாலும் ஒரு வர்த்தகரின் இலாபமீட்டுதலுக்காக பல்லாயிரம் மக்களின் உயிர் வாழ்க்கை யும் வாழ்வாதரமும் ஆபத்து க் குட் படு வதை அப்பிரதேச மக்கள் எதிர்க்கின்றனர். அரச அதிகாரிகளும் அவ்வர்த்தகரும் மக்களுக்கு ஆபத்துக்களையும் நோய்களையும் விளைவிக்க முயல்கின்றனர் எனவும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
நீர் நிரம்பி அழுத்தம் அதிகரிக்கும் நீரோட்டப் பாதையில் குளங்கள் அண்மித்துள்ள இடங்களில் இவ்வாறான தொழிற்சாலையின் கழிவகற்றும் கிடங்கை அமைத்தால் அலுமினியக் கழிவுகள் நீருடன் கலக்கும்.
குளங்கள் வயல்களை அலுமினியக் கழிவுகள் மாசாக்கி நிலத்தடி நீரும் மாசாகும்.

சூழக் குடியிருக்கும் சுன்னாகம், கந்தரோடை, மல்லாகம், அளவெட்டி, உடுவில் மக்களுக்கு உயிராபத்தான நோய்கள் வர ஏதுவாகும்.
அதனால் இத் தொழிற்சாலை இங்கு இயக்கப்படுவதை எதிர்த்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் ஒப்பமிட்டு முறைப்பாட்டை கையளித்திருந்தனர்.
எனினும் அத்தொழிற்சாலையை அகற்றுவதற்கு இன்னமும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் விசனமடைந்துள்ளனர்.
சூழல் சுற்றாடலைப் பாதுகாப்பதில் சுன்னாகம் கந்தரோடை மக்கள் எதிர்கொள்ளும்
நெருக்கடிகள்…..
கட்டுவன், தெல்லிப்பளை,குரும்பசிட்டி, ஏழாலை வடக்கு, ஏழாலை தெற்கு, சாளம்பை முருகன் கோவிலடி, சூராவத்தை, வரியப்புலம், மயிலணி, சுன்னாகம் கிழக்கு ஆகிய பகுதிகளின் வெள்ளத்தை வாரியள்ளி ஆறாக ஓடும் பல வெள்ளவாய்க்கால் பாதையே சுன்னாகம் பருத்திக்
கலட்டிக்கிராமம் !
காங்கேசன் துறை வீதியில் உள்ள பாலத்தின் இரண்டுகண் மதகினூடாக கடக்கும் இந்த வெள்ளம் சுன்னாகம் ஐயனார் கோவிலடி, சுன்னாகம் பருத்திக்கலட்டி நெல் வயல்களை நிரப்பும். இங்கேயே இந்த அலுமினியத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம்( வலிகாமம் தெற்கு) பிரதேச சபை மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆகியவற்றைப் பிரிக்கும் நிர்வாக எல்லைக் கோடாகவும் இந்த “வெள்ளவாய்க்கால் ஆறும்” பருத்திக்கலட்டி, கந்தரோடை ஆலடிப்பகுதியும் அமைகிறது.
சுன்னாகம் மின்சார நிலைய கழிவு ஒயில் அனர்த்தத்தின் விளைவுகளையும் சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு ஒயிலால் பாரியளவில் மாசுற்றதையும் மறப்பதற்கில்லை….
அந்த அனர்த்தம் நிகழ்ந்த முற்சூழலை அரசாங்கத்தின் பொறுப்புச் சொல்லவேண்டிய அதிகாரிகளும் அவற்றை கண்காணிக்க வேண்டிய உள்ளூராட்சித்துறையும் எப்படிக் கையாண்டார்கள் என்பதும் அந்த அனர்த்தத்தின் பின்னரான பிற்சூழலை இப்பொழுது எப்படிக் கையாளுகிறார்கள் என்பதும் எமக்கு சாதாரண பாடங்கள் அல்ல !
அதேவேளை இந்த வெள்ளவாய்க்கால் ஆற்றுப்படுக்கையுடன் தனது வீட்டைக்கட்டியிருந்த அதே வர்த்தகர் அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை சட்ட விரோதமாக இரகசியமாக ஐயனார்கோவிலடியில்அமைத்து தொழிற்சாலை கழிவுகளை நிலத்திலும், நீரிலும், காற்றிலும் அகற்றிக் கொண்டிருந்தார்.
அது தொடர்பாக இம்மக்கள் அரச திணைக் களங்களுக்கும் பல்வேறு அதிகார சபைகளுக்கும் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கும் முறையீடுகளை வழங்கினர்.
ஆயினும் அந்த தொழிற்சாலைக்கான கட்டிடத் தொகுதியை அந்த வர்த்தகர் இன்னமும் பேணுகிறார்.
பின்னர் இந்த வெள்ள ஆற்று வாய்க்காலுக்கு மிக அண்மித்த தனியார் வீடு ஒன்றை மல்லாகத்தில் எடுத்து அலுமினிய உற்பத்திகளை மீண்டும் சட்டவிரோதமாக வும் இரகசியமாகவும் மேற்கொண்டார். அதனையிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளருக்கு மக்கள் முறையீடு செய்தனர் !
இப்பொழுது ஐயனார் கோவிலிருந்து சில நூறு மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் பருத்தி க் கல ட் டி யில் அலுமினியத் தொழிற்சாலையை அமைத்துள்ளார்.
இவரது முதலிரண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பிலும் புதிதாக பருத்திக்கலட்டியில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை தொடர்பிலும் சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் யாழ்ப்பாணப் பணிப்பாளர் சுபோதரன் சகல விபரங்களையும் – அதாவது அப்பிரதேசங்கள்
நீர்ப்பிடிப்புப் பிரதேசங்களாகவும் தாழ்ந்த வெள்ள நீரோட்டப் பிரதேசமாகவும் நிலத்தடி நீர் வளம் உள்ள இடமாகவும் விவசாய நிலங்களாகவும் உள்ளன என்பதை முழுமையாக அறிந்திருந்தார். அந்த பருத்திக்கலட்டிப் பிரதேசத்தில் அலுமினியத் தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதை சிபாரிசு செய்திருந்தால் அது ஏதோ ஒரு இலஞ்ச ஊழல் பின் புலத்தில்தான் நடந்திருக்கும் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் யாழ்ப்பாணப் பணிப்பாளர் சுபோதரன் பதவியில் இருந்த காலத்தில் யாழ்.மாவட்டம் முழுவதும் சுண்ணக்கல் அகழ்வு உட்பட சுற்றாடலை மாசுபடுத்தும் பல செயற்பாடுகளை சாதாரண மக்களின் வாழ்வைப் பாதிக்கும் வகையில் அனுமதி வழங்கல் எனும் போர்வையில் செயற்படுத்தினார். அத்துடன் தமது அலுவலகத்தின் வளங்களையும் கடமை நேரத்தையும் முறைகேடாகவும் மோசடியாகவும் துஸ்பிரயோகம் செய்து வந்தார். வலிகாமத்தின் வளமான விவசாய செம்மண் நிலங்களில் வாகனக் கழிவகற்றும் வாகனச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் டீல்களும் இவர் மூலமே நடந்தன.
நீரோட்டப் பாதையில் குடியிருப்புக்குள் நெற்செய்கை, மரக்கறிச் செய்கை, பழமரச் செய்கை, விலங்கு வளர்ப்பு மேற்கொள்ளும் விவசாய நிலங்களில், வாய்க்கால்கள், நீரோட்டம், குளங்கள் அமைந்துள்ள புவியியல் பிரதேசங்களில் நிலத்தடியிலோ நிலத்தின் மேலோ கழிவுகளை அகற்றும் அலுமினியம் போன்ற பார உலோகத்தொழிற்சாலைகளை நிறுவ அனுமதி கொடுத்தால் பயிர்செய் நிலங்களும் குடியிருப்பு நிலங்களும் நீர் நிலைகளும் நிலத்தடி நீரும் மாசடையும்.
இது தீவிர நோய்களை மக்களுக்கு உருவாக்கும். அதுமட்டுமல்ல இவ்வாறான தொழிற்சாலைகளை அமைக்க அனுமதித்தால் இதனை முன்னுதாரணமாகக் காட்டி மேலும் பல வர்த்தகர்கள் பயிர் செய்வதற்காக என்றும் வீடுகள் கட்டி வாழ்வதற்காக என்றும் காணி உரிமையாளர்களிடம் பொய்கூறி காணிகளை வாங்கி இத்தகைய வளமான நன்னீர் வளம் மிக்க பிரதேசங்களில் முறைகேடான கழிவகற்றும் பொறி முறைகளைகளுடன் கூடிய தொழிற்சாலைகளை அமைத்து நச்சு மாசு மக்களைக் “கவ்விச் சப்பிச் சாகடிக்க” வழி சமைத்ததாக முடியும்.

இப்பொழுது அலுமினியத் தொழிற்சாலை பொருத்தமற்ற கழிவுத் தொகுதிகளுடன் நீரோட்டப்பாதைகளிலும் பயிர்செய் நிலங்களிலும் மக்கள் குடியிருப்புக்குள்ளும் அமைக்கும் தொடர் செயற்பாடு வலிகாமம் தெற்கின் சுன்னாகம் கிழக்கு-பருத்திக்கலட்டி மக்கள் குடியிருப்பு மற்றும் பயிர் செய் நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. அந்தத் தொழிற்சாலையும் அந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலமும் அமைந்துள்ள நீர் நிரம்பி நீரோடும் அப்பகுதி பருத்திக்கலட்டி எனும் விவசாயக் குறிச்சி ஆகும். அதனூடாகவே வலிகாமத்தின் பிரதான வெள்ள ஆறு கந்தரோடைக் குளங்களைச் சென்றடையும்.
அவ்வாறான நீரோட்டம் சாதாரண மாரிகாலங்களில் ஒவ்வொரு வருடமும் வழமையாக நடைபெறும். இத்தகைய கழிவகற்றும் தொழிற்சாலைகளால் கிராமங்களும் விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்பு க் களும் நிலத்தடி நீரும் குளங்களும் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக சாதாரண மழைகாலங்களிலேயே மாசடையும்.
வலிகாமத்தின் பிரதான வெள்ளவாய்க்கால் ஆற்றின் வெள்ளம் பருத்திக்கலட்டி ஊடாகவே கந்தரோடைக் குளங்களைச் சென்றடைகிறது !

ஆகையினால் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, உள்ளூராட்சி சபைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, கம நல சேவைத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ,சுகாதாரத் திணைக்களம் முதலியன ஒன்றிணைந்து இவை தொடர்பில் மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத முடிவுகளை எடுக்கவேண்டும். அது இறுக்கமான கொள்கைரீதியான முடிவாகவும் அமையவேண்டும்.
ஏற்கனவே Industrial Zones( கைத்தொழிற் பேட்டைகள்) எங்கு எங்கு அமையவேண்டும் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் பட வரைபில் தெளிவாகக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அதில் வலிகாமம் தெற்கின் தோட்ட நிலங்களோ நெற்செய்கை நிலங்களோ நீரோட்டப்பாதைகளோ குடியிருப்பு நிலங்களோ உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை.
தொழிற்சாலைகள் ஒரு தொகுதியாக Industrial Zone க்குள் அமைக்கப்படும் போது தான் அவற்றை ஒருமித்து கண்காணித்து வழி நடத்தி ஒழுங்கு படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாலும் சுற்றாடல் பாதுகாப்பு அலுவலர்களாலும் இயலும். ஊரெல்லாம் தொழிற்சாலைகள் முளைக்க அனுமதித்தால் நிலம், நீர், காற்று எல்லாம் மாசடைந்து மக்கள் அழிவர்.

