அருச்சுனா ஒரு பிறேக் இல்லாத வாகனம்!! எப்பவும் விபத்துக்குள்ளாகலாம்!! கம்பவாருதி கூறுவது என்ன?
கம்பவாருதியான ஜெயராஜ் தனக்குத் தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லும் பேஸ்புக் பக்கம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவைப் பற்றி இவ்வாறு பதிவிட்டுள்ளார்…..
கேள்வி :
டாக்டர் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள் உங்களையும் கவர்கிறதா என்ன?
பதில் :
நிச்சயமாக இல்லை! நம் ஊரில் சிலரைப் பற்றிச் சொல்லுகையில் ‘அவர் கல்யாண வீட்டிற்குப் போனால் மாப்பிள்ளையாகவும், செத்தவீட்டிற்குப் போனால் பிரேதமாகவும் இருக்கத்தான் விரும்புவார்’ என்பார்கள். இவரும் அப்படித்தான் இருப்பதுபோற் தோன்றுகிறது. எங்கு போனாலும் தன்னை முதன்மைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு பிரச்சனைகள் செய்து வருகிறார்.
தனது அதிரடி நடவடிக்கைகளால், குறித்த சிலநாட்களுக்குள் தன்னை வளர்த்துக் கொண்டு வெற்றி கண்ட இவர், இனியும் அப்படியே தனது பாதையைத் தொடரலாம் என நினைப்பதுபோற் தெரிகிறது. அப்படி நினைந்தால் அது பெருந் தவறான முடிவாக இருக்கும் என்பது நிச்சயம்.
அவருடைய செயற்பாடுகளில் நாகரீகம் இல்லை. எவரையுமே அவர் மதித்து நடப்பதாய்த் தெரியவில்லை. மற்றவர்களை இழிவு செய்வதன் மூலம் தன்னை அவர் உயர்த்திக் கொள்ள நினைக்கிறார். அளவுக்கு அதிகமான அவரது ஆளுமையை, அவரது குறையென்றே நினைக்கத் தோன்றுகிறது. கிடைத்திருக்கும் திடீர் வெற்றியால் சமநிலை கெட்டுப்போய் இருக்கிறார் அவர்.
பிறேக் இல்லாத வாகனத்தைப் போன்ற அவரது இந்த இயக்கம் ஆபத்தானது. பிறேக் இல்லாத வாகனம், முதலில் மற்றவர்களை இடித்துச் சிதைக்கும். முடிவில், எங்கேனும் போய் மோதித் தன்னையும் அது சிதைத்துக் கொள்ளும்.
அவர் கைதட்டல்களுக்காய் இயங்குவதை விட்டுவிட்டு, கண்ணியமானவராய்ப் பெயரெடுக்க வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது நம் இனத்துக்கும் நல்லது.
‘பெருக்கத்தில் வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு’ என்ற வள்ளுவரின் குறளை அவருக்கு யாரேனும் நினைவூட்ட வேண்டும். சுருக்கத்திலேயே பணிவில்லாமல் இருந்த அவர், பெருக்கத்தில் தலைகால் புரியாமல் ஆட்டம் போடத் தொடங்கியிருக்கிறார். அது அவருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுமோ எனப் பயமாய் இருக்கிறது.
அவரது இந்தச் செயற்பாடுகள், ஆழமில்லாத நம்மவர் பலருக்குப் பிடித்துப் போக, உள்ளுரிலும், வெளிநாடுகளிலுமாகப் பலர், ஊடகங்களினூடு வெகு உற்சாகமாக அவருக்கு ‘வால்முறுக்கி’விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டம், ஒருவர் வெற்றிபெறும்வரை அவரைத் தூக்கிப் பிடித்துவிட்டு, தோல்வியுற்றதும் ‘தொப்’ எனப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கும். அர்ச்சுனா இதனை உணர வேண்டும்.

