புதினங்களின் சங்கமம்

யாழில் றோயல் அக்கடமி ரியூசனில் நடந்த கொடூரச் செயல்!! சந்திரனை தாக்க முற்பட்ட மாணவர்களின் பெற்றோர்!!

யாழில் றோயல் அக்கடமி எனும் பெயரில் இயங்கும் ரியூசன் முதலாளியின் கொடூரச் செயல் காரணமாக அங்கு மாணவர்களை கல்வி கற்க அனுப்பிய பெற்றோர் கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அவரை தாக்க முற்பட்டுமுள்ளனர். இச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த ரியூசன் நல்லுார் அரசடி வீதியில் கஸ்துாரியார் வீதி சந்திக்கும் இடத்துக்கு அருகிலும் நாவலர் வீதியில் ரிசிரிக்கு அருகிலும் செயற்பட்டு வருகின்றது. இந்த ரியூசன் முதலாளி யாழ் இந்துக்கல்லுாரியில் வரலாறு மற்றும் அது தொடர்பான பாடங்களைக் கற்பித்து வரும் சந்திரன் என்ற ஆசிரியர் ஆவார். சந்திரனுக்கு சாவகச்சேரி இந்துக்கல்லுாரிக்கு இடமாற்றம் கிடைத்தும் இன்னும் அங்கு செல்லாமல் யாழ் இந்துக்கல்லுாரியிலேயே கற்பித்து வருகின்றாராம். அதனால் யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் செந்தில்மாறன் அவருக்கு பாட நேர அட்டவனை கொடுக்காமல் உள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் சந்திரன் நடாத்தும் றோயல் அக்கடமியில் தமிழ் பாடம் கற்பித்த ஆசிரியர் அந்த அக்கடமியிலிருந்து விலகி தமிழ் பாடத்திற்கு என தனியான ரியூசன் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து றோயல் அக்கடமியில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் தமிழ்ப் பாடத்திற்கு அவரிடம் சென்று கற்றுள்ளார்கள். இதனை அறிந்து கடும் கோபமுற்ற சந்திரன், 15 வயதுக்கும் குறைவான குறித்த மாணவர்கள் றோயலுக்கு வந்து ஏனைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்த போது அவர்களை எழுப்பி ரியூசனை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.

அத்துடன் தனது ரியூசனுக்கு அருகில் தெருவிலும் நிற்க வேண்டாம் என கூறி அவர்களை துரத்தியதால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்கள். குறித்த மாணவர்களை பெற்றோரே மிகவும் கவனமாக ரியூசன் மற்றும் பாடசாலைகளுக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார்கள். இந் நிலையில் சிறுமிகளான மாணவிகளும் மாணவர்களும் அழுது கொண்டு அந்த இடத்தை விட்டு நடந்து செல்லத் தொடங்கியதாகத் தெரியவருகின்றது. வீதியில் சிறுவர்கள் அலங்கோல நிலையில் செல்வதை அவ்வழியாக தெருவில் சென்ற பலரும் நேரடியாக பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இதனையடுத்து குறித்த மாணவர்களின் பெற்றோருக்கு இந்த விடயம் தெரியவந்தவுடன் றோயல் அக்கடமி பெற்றோரால் சுற்றி வளைக்கப்பட்டது. றோயல் முதலாளியான சந்திரன் மீது தாக்குதல் நடாத்தவும் பெற்றோர்கள் முயன்றதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டு பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றோரை பொலிசார் அகற்றியுள்ளார்கள்.

றோயல் அக்கடமி முதலாளி சந்திரன் தற்போதய யாழ் மாவட்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரான ரஜீவனின் நெருங்கிய நண்பன் என கூறி தன்னை அச்சுறுத்திய பெற்றோரை பொலிசாரைக் கொண்டு கைது செய்ய ஆயத்தமாகியுள்ளாராம்.

றோயல் அக்கடமி முதலாளி சந்திரனும்  எடிசன் அக்கடமி என்ற ரியூசனில் வரலாறு கற்பித்த பின்னர் அங்கிருந்து பிரிந்தே குறித்த ரியூசனை ஆரம்பித்தவர் எனவும் தன்னைப் போல அந்த தமிழ் வாத்தியாரும் தனது ரியூசனை வீழ்த்தி முன்னேறிவிடுவார் என்ற  கொடூர வெறியிலேயே மாணவர்களின் நலனைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காது வீதியில் துரத்தியுள்ளார் என கல்விச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல ரியூசன்கள் கல்வி கற்பிப்பதற்கு அப்பால் மாணவர்களின் நலன்களையும் ஒழுக்கத்தையும் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் யாழில் றோயல் அக்கடமி போன்ற சில தனியார் கல்வி நிறுவனங்களில் கொடூர செயற்பாடுகள் மற்றும் சீரழிவுகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குழப்பப்பட்டு மாணவர்கள் சீரழியும் செயற்பாடுகளும் அதிகரிக்கும் தன்மை காணப்படுகின்றது.

  வடக்கு மாகாண ஆளுநர், தனியார் கல்வி நிறவனங்களில் கொடூரச் செயற்பாடுகளைக் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.