உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்ப முடியாதாம் – சுகாஷ் கூறுகின்றார்!
உதய கம்பன்பில ஒரு இனவாதி என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை விட ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அராலியில் இன்றையதினம் (22.10.2024) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இணைந்திருந்த வடக்கு – கிழக்கினை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பிரித்தவர்கள் ஜேவிபியும் அனுரவும். சந்திரிகாவினுடைய ஆட்சி கலத்தில் அனுரகுமார அவர்கள் விவசாய அமைச்சராக இருந்தபோதுதான் செம்மணியில் 600 இளைஞர்கள் கொண்டு புதைக்கப்பட்டார்கள்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுரகுமாரவின் கட்சியும், அநுரகுமாரவும்தான் கொழும்பிலே சிங்கள மக்களை திரட்டி, முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரபாகரன் தப்பி விடுவார் என மஹிந்தவிக்கு அழுத்தம் கொடுத்து கொத்துக்கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கு காரணமானவர்கள் இந்த ஜேவிபி.
இப்போது உதய கம்மன்பில மீது, அநுரகுமார அவர்கள் பழி போட்டுவிட்டு தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அநுர ஜனாதிபதி ஆவதற்கு முன்பு சொல்லி இருந்தார் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை தனக்குத் தெரியும் என்று. அப்படி என்றால் ஏன் இதுவரை அவர்களை கைது செய்யவில்லை.
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் ராஜபக்ச குடும்பம் என்றால், மத்திய வங்கியின் ஊழல் குற்றவாளிகள் ரணில் விக்ரமசிங்கமும் அவருடைய தரப்பினரும். ஆகவே அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் ராஜபக்ச குடும்பத்தினரையும், ரணில் விக்ரமசிங்க தரப்பினரையும் மறியலுக்குள் போடட்டும் என தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கிவிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், இனப் பிரச்சனைக்கும் ஒரு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணையை நடத்தட்டும். அதற்குப் பின்னர் நாங்கள் அனுரகுமாரவை நம்புவதை பற்றி யோசிப்போம் என அவர் தெரிவித்தார்.